ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது எந்த நாட்டின் விமானங்களும் பறக்கக் கூடாது என்பதற்காக விதிக்கப்படும் தடைதான் ‘நோ ஃபிளை சோன்’ . இந்த தடையை விதிப்பதன் மூலம் குறிப்பிட்ட நாட்டின் மீதோ அல்லது குறிப்பிட்ட பகுதியின் மீதோ விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தடுத்து நிறுத்தப்படும். இந்த தடையை மீறி தாக்குதல் நடத்தும் விமானங்கள் மீது தடையை விதிக்கும் நாடுகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி அவற்றை அழிக்கலாம்.
முன்னதாக வளைகுடா போரின்போது ஈராக்கின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள தங்கள் ஆதரவாளர்களைக் காக்க அப்பகுதியை ‘நோ ஃபிளை சோன்’ஆக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அறிவித்தன. இந்த தடையை மீறி அப்பகுதியில் பறந்த ஈராக் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 1993-ம் ஆண்டில் போஸ்னியா மீதான போர் விமானங்களின் தாக்குதலை கட்டுப்படுத்த அப்பகுதியை ‘நோ ஃபிளை சோன்’ ஆக நேட்டோ அறிவித்தது.
உக்ரைன் நாட்டின் மீது தற்போது ரஷ்ய விமானங்கள் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்நாட்டை நோ ஃபிளை சோனாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அப்படி அறிவித்தால் தாங்கள் நேரடியாக போரில் கலந்துகொண்டதைப் போல் ஆகிவிடும் என்று கூறி அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.