No menu items!

நடிகர் சங்கத் தேர்தல் – உள்குத்து அரசியல்

நடிகர் சங்கத் தேர்தல் – உள்குத்து அரசியல்

தென்னிந்திய நடிகர் சங்கம், என்பது ஒரு சாதாரணமான சங்கம் அல்ல. தென்னிந்திய திரைப்பட உலகின் ஜாம்பவான்களால் தொலைநோக்குப் பார்வையோடு ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம்.

1952 ஆகஸ்டில் துணை நடிகர்களுக்கான சங்கம் என்ற விதை போடப்பட்டது. ஆனால் நடிகர்கள் எல்லோருமே நடிகர்கள்தான். அதில் என்ன நடிகர்கள், துணைநடிகர்கள் என்ற பாகுபாடு? இந்தக் கேள்வியை எழுப்பியவர் எம்.ஜி.ஆர். துணை என்ற சொல் நீக்கப்பட்டது.

இங்குதான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான வேர் வலுவாக ஊன்றியது.

எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் கே. சுப்ரமணியம் ஆகியோரால் 1952-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது.

இதன் நோக்கம் தென்னிந்திய நடிகர்களின் நலனுக்காக ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவது. அந்த சங்கம் செயல்படுவதற்கு சொந்தமாக இடம் வாங்குவது. அதில் சங்க கட்டிடத்தை கட்டுவது என்பதுதான். அந்தக் காலக் கட்டத்தில் 18 கிரவுண்ட் இடம் வாங்கப்பட்டது. அங்கு சங்கரதாஸ் சுவாமிகள் கூடம் கட்டப்பட்டு விழாக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. நடிகர் சங்கம் அலுவலகம் அதன் அருகிலேயே சிறிய இடத்தில் இயங்கி வந்தது.

நடிகர் சங்கத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்ட வேண்டும் என்ற யோசனை 2000ஆம் ஆண்டுகளில் கூறப்பட்டது. அது 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிரச்சினையாக மாறியது.

சென்னையின் மையப்பகுதியாக இருக்கும் தியாகராய நகரில், ஏறக்குறைய 18 கிரவுண்ட் பரப்பளவில் இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க இடத்தில் தனியார் நிறுவனம் மூலம் சொந்தமாக கட்டிடத்தை கட்டும் திட்டம் அப்போது சங்கத்தின் நிர்வாக பதவியில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவியால் முன்வைக்கப்பட்டது.

அப்போது மிகப்பிரபலமாக இருந்த எஸ்பிஐ சினிமாஸ் என்ற நிறுவனம் அதாவது சத்யம் சினிமாஸ் நிறுவனத்தினால் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும். இந்த கட்டிடத்தில் பல தளங்கள் இருக்கும். குறிப்பிட்ட தளங்கள் மட்டும் நடிகர் சங்கத்திற்கும், மற்ற தளங்கள் அனைத்தும் எஸ்பிஐ சினிமாஸிற்கும் சேரும் வகையில் அந்த திட்டம் முன்வைக்கப்பட்டது. இதில் மல்ட்டிப்ளெக்ஸ், அலுவலக பணியிடங்கள் கட்டுவதன் மூலம் வருவாய்க்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய 29 ஆண்டு 11 மாதங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் கட்டிடம் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

2011-ல் நடிகர் சங்கத்தின் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 2012-ல் நடிகர் சங்க உறுப்பினரான பூச்சி முருகனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து செயற்குழு ஒப்புதல் இல்லாமல் முடிவெடுப்பது என்பது கூடாது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமல் எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்ற கேள்வியில் ஆரம்பித்தது நடிகர் சங்கத்தில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள்.

சரத்குமார் மற்றும் ராதாரவி மாமா மச்சான் என்பதால், இவர்கள் உறவு அடிப்படையில் சுயமாக, தங்களுக்கு இணக்கமான முறையில் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று மிகவும் வெளிப்படையாகவே பிரச்னை வெடித்தது. பல ஆண்டுகளாக தேர்தல் இல்லாமலேயே பதவி வகித்துவரும் ராதாரவியின் நடவடிக்கைகள் சரியா என்ற கருத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் எழுப்பட்டது.

நடிகர் சங்கத்திற்கு நாமே ஏன் சொந்தமாக கட்டிடம் கட்ட கூடாது? தனியார் நிறுவனத்தின் உதவி எதற்கு? என்று விஷால் கேட்க நடிகர் சங்கத்தில் சரவெடி சம்பங்கள் அரங்கேறின.

இதற்கெல்லாம் சரியான ஒரு வாய்ப்பாக அமைந்தது கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படம். இப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழ, நடிகர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தென்னிந்திய நடிகர் சங்கம் மெளன விரதத்தில் இருந்தது.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விஷாலின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி தயாரித்த படம் ’மகாபிரபு.’ இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் தொடர்பாக எழுந்த பிரச்னையில் சரத்குமார் ஒதுங்கியே இருந்தார் என்ற ஒரு ஃப்ளாஷ்பேக் சம்பவமும் நடிகர்களிடையே பேசப்பட்டது. இந்த பிரச்சினைகள் எரிமலையின் லாவாவைப் போல வெளித்தெரியாமல் கொத்தித்து கொண்டிருந்தது.
’விஸ்வரூபம்’ பட வெளியீட்டில் நடிகர் சங்கம் என்ன செய்கிறது என்கிற ரீதியில் விஷால் ட்வீட் போட, பதிலுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தில் எதிரும் புதிருமாக இருந்த பூச்சி முருகன், விஷாலுடன் கைக்கோர்த்தார். ராதாரவியின் சீடராக அடையாளம் காணப்பட்டவர் பூச்சி முருகன், ’சங்க கட்டிட விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை மேண்டும். நாமே கட்டுவதால் பலன்கள் அதிகம் என்பதால் விஷால் கருத்தையே தானும் எதிரொலிப்பதாக’ கூறினார்.

விஷால், அடுத்து பூச்சி முருகன் என மற்ற ,முன்னணி நட்சத்திரங்களும் விஷால் பின்னால் அணிவகுக்க உருவானது ‘பாண்டவர் அணி’.

2015 தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெறுகிறது. தேர்தலில் போட்டியிட மறுத்த பூச்சி முருகனை நியமன உறுப்பினராக நியமிக்கிறார்கள். இது எதிரணியினரிடம் சலசலப்பை உருவாக்குகிறது.

நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சியை நடத்துவது என புதிய நிர்வாக அணியால் திட்டமிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முன்னணி நட்சத்திரங்கள் சம்பளமே இல்லாமல் ஒரு படம் நடிப்பது., அதன் மூலமான வருவாயை நடிகர் சங்கத்திற்கு பயன்படுத்துவது என்ற கமர்ஷியல் திட்டமும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு நான் படத்தை தயாரிக்கிறேன் என ஐசரி கணேஷ் முன் வர, ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற பெயரில் படமெடுக்க முடிவெடுக்கப்பட்டது. பிரபல இயக்குநரான கே. சுபாஷ் கதையில், விஷாலும் கார்த்தியும் நடிக்க, பிரபுதேவா இயக்குவதாக பிரம்மாண்டமான அறிவிப்பு வெளியானது.

இப்பட கதையின்படி நண்பர்கள் இருவருக்குள் இருக்கும் வித்தியாசங்கள் பற்றிய காட்சிகள் பிரமாதமாக இருப்பதாக விஷாலும், கார்த்தியும் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ள, மற்றொரு பக்கம் வில்லனாக யார் நடிப்பது என்ற போட்டி மற்ற நட்சத்திரங்கள் மத்தியில் நிலவியது. காரணம் அக்கதையின் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அட்டகாசமான வாய்ப்புகள் இருந்ததுதான்.

உடனே ஆரம்பித்தது குழப்பம். ஷூட் தொடங்குவதற்கு முன்பாகவே ஆரம்பித்த உள்குத்து அரசியல் அப்படத்திற்கு உண்மையான வில்லனாகி இருந்தது. விளைவு படம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில் வயதில் மூத்த குட்டி நடிகை அணி மாற, பிரச்னை வேகமெடுத்தது. மற்றொரு பக்கம் தனது பாடகர் கணவருக்கு மலேஷியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வெறுப்பின் உச்சத்தில் இருந்த பிதாமக நடிகையும் குட்டி நடிகையுடன் இணைந்தார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பாண்டவர் அணிக்கு போட்டியாக புதிய அணி உருவானது. ஐசரி கணேஷ், பாக்கியராஜ் போன்றவர்கள் இந்த அணிக்கு வந்தனர். இப்படி அணிகள் இரண்டாக மாற போட்டி சூடாகியது. தேர்தல் நடந்தது. முடிவுகளை அறிவிக்க முடியவில்லை. வழக்குகள் போடப்பட்டன. வாதங்கள் வைக்கப்பட்டன. இந்த வழக்குகளால் பெரும் வரலாற்றைக் கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கம் முடங்கியது. எம்.ஜி.ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் போன்ற திரையுலக சூப்பர் ஸ்டார்களின் தொலைநோக்குப் பார்வையை, கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யுமளவிற்கு படாதப்பாடு படுத்திவிட்டது.

ஒரு வழியாக 2 வருடம் 9 மாதங்கள் கழித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாண்டவர் அணியின் கை ஓங்கி இருக்கிறது.

ஆனால் இவர்கள் ஜெயித்து என்ன பலன். இந்த வருடமே அடுத்த தேர்தல் வந்துவிடும். அப்போது பார்த்து கொள்வோம் என எதிரணி இப்பொழுதே பேட்டிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதா? தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மூன்று வருடம் தொடரமுடியுமா என்று விசாரித்தோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்ட, விதிமுறைகள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், பதவியேற்றத்திலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகள் பதவியின் மூலம் பணி செய்யலாம் என்கிறதாம். இப்பொழுதுதானே தேர்தல் முடிவே வெளிவந்திருக்கின்றன. இனிதான் பதவியேற்க வேண்டும். அதனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூன்றாண்டுகள் தொடருவார்கள் என்று நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

பிரச்சினைகள் இப்போதைக்கு முடிவுக்கு வந்தது போல் தெரிந்தாலும் தமிழ்த் திரையுலகில் கோஷ்டி மோதல்கள் தொடரும் என்றே தெரிகிறது.

அடுத்த மூன்று வருடத்தில் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதே எங்கள் நோக்கம் என்கிறது பாண்டவர் அணி. அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்கிறது எதிரணி. என்ன செய்வார்கள் என்று காத்திருந்து பார்ப்போம்.
’கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’ ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிக்குமா இல்லையா?! அதற்கும் காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...