No menu items!

தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

2022-23-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன, பொருளாதாரா நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘‘இந்த பட்ஜெட் ஒரு நல்ல மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்கிறார் நிதி ஆலோசகர் சதீஷ்குமார். தொடர்ந்து நம்மிடம் பேசிய சதீஷ்குமார், “|கடந்த 2014-ம் ஆண்டு முதலே மாநிலத்தின் நிதிநிலை சரிவை சந்தித்து வருகிறது. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவும் தமிழ்நாடு ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துவிட்டது. கொரோனா, தொடர் கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் – இப்படி நிறைய பொருளாதார பேரிடர்கள்.

கடந்த ஏழு ஆண்டுகால சரிவுக்குப் பிறகும், இந்த பட்ஜெட் கொடுத்திருக்கும் ரிசல்ட் பாராட்டத்தக்கதுதான். இவ்வளவு சவாலான ஆண்டிலும் வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்திருப்பதை, இந்த அரசாங்கத்தின் விவேகமான நிதி நிர்வாகத்திற்குச் சான்றாக நான் பார்க்கிறேன்” என்றார்.

நம்முடன் பேசிய திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் செயலாளர் செ. கோபால கிருஷ்ணன், ‘‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சிறு-குறு தொழில்களுக்கு மூலதன மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வங்கி கடன் உத்தரவாத திட்டமும் வரவேற்கத்தக்கது. சிறு-குறு தொழில் வளர்ச்சிக்கு பயனளிக்கக்கூடியது.

ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கையில் சிறு-குறு தொழிலகளுக்காக 911.50 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது எங்களூக்கு ஏமாற்றமளிக்கிறது.

தனிப்பட்ட முறையில் திருச்சி மாவட்டத்துக்காக சுற்றுவட்ட சாலை, உணவு பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா விரிவுபடுத்துதல் போன்ற எங்கள் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து எழுதும் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.

பட்ஜெட்டில் இருந்து முக்கிய அம்சங்கள்:

• மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளில் முதல் முறையாக 4.15% இல் இருந்து 3.08% ஆகக் குறைந்துள்ளது.

• போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கண்காணிக்க சிறப்பு சமூக ஊடக செல் உருவாக்கப்படும்.

• காவல் துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு.

• மாநிலத்தில் வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

• திராவிட சின்னமான பெரியாரின் எழுத்துகள் மற்றும் பேச்சுக்கள் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு.

• முதல் முறையாக டான்சிம் – தமிழ்நாடு ஸ்டார்ட் அப் & இன்னோவேட்டிவ் மிஷனுக்கு 30 கோடி ஒதுக்கீடு

• சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.4800 கோடி ஒதுக்கீடு.

• பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு

• அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளும் நவீனமயமாக்கப்படும். 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இதை செயல்படுத்த மட்டும் 7000 கோடி ஒதுக்கீடு.

• உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வியைத் தொடர மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்.

• அரசுப் பள்ளி அல்லாத பள்ளிகளில் 1-10ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

• சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

• சென்னை புறநகரில் ‘மெகா பொட்டானிக்கல் கார்டன்.’ இந்த வசதி, சுற்றுலாத் துறை மற்றும் நகரின் பசுமையை மேம்படுத்தும். இந்த பூங்கா, லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து ரூ. 300 கோடியில் செயல்படுத்தப்படும்.

• தமிழ்மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.

• விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் தொல்பொருட்களை வைக்க அருங்காட்சியகம்.

• கொற்கையில் ரூ. 5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு

• நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு

• வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

• முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு

• சுய உதவிக் குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கான பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு

• தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு

• தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு

• வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

• தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு

• ஆதரவில்லாத, கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க ரூ. 20 கோடியில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகம்

• பழமையான தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

• தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ. 849 கோடி ஒதுக்கீடு

• தமிழகத்தில் புதிதாக 7 வணிக நீதிமன்றங்கள் அமைப்பு

• அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள்; ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்த ரூ. 5.6 கோடி ஒதுக்கீடு

• நீதி நிர்வாகத் துறைக்காக ரூ.1.461.97 கோடி ஒதுக்கீடு

• பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி ஒதுக்கீடு

• இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு

• ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு. ரூ. 10 கோடியில் வடசென்னையில் அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

• மருத்துவத்துறைக்கு 17,901.23 கோடி ஒதுக்கீடு

• முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திக்கு ரூ.1,547 கோடி ஒதுக்கீடு

• இலவச மிதிவண்டி திட்டத்திற்கு 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு

• நீர் மேலாண்மைக்காக ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு

• மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ. 2800 கோடி ஒதுக்கீடு

• மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு ரூ.1620 கோடி ஒதுக்கீடு

• இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்த ஆண்டும் தொடரும். இதறகாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு

• தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ரூ.13 ஆயிரம் கோடி இழப்பை அரசே ஏற்கும் என அறிவிப்பு

• கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...