தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. 7-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். அன்றே டெல்லி புறப்பட்டு சென்ற பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது என்னால் அங்கே போக முடியவில்லை.எனக்கு சேலத்தில் ஒரு கூட்டமும், கள்ளக்குறிச்சியில் ஒருகூட்டமும் இருந்தது. அதனால் அவரை சந்திக்க முடியவில்லை என்பதால், டெல்லியில் அவரை சந்தித்தேன். அப்போது அவர் தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதனால் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுடன் இன்னும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. மிகவலுவான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்தி எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திமுக தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.
‘உங்கள் கனவை சொல்லுங்கள்’என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 1 மாதம்தான் இருக்கிறது. இப்போது எப்படி போய் மக்கள் கனவை சொல்லச் சொல்லிக் கேட்டு, அதை நிறைவேற்ற முடியும்? இதுவரையிலான 73 ஆண்டுகள் பல கட்சிகள் ஆட்சி புரிந்தபோது 2021 வரை ரூ.5.18 லட்சம் கோடி தான் தமிழகத்தின் கடனாக இருந்தது. இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு 5 ஆண்டுகள் நிறைவு செய்யும்போது மேலும் சுமார் 5.5 லட்சம் கோடி கடன் பெற்றிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பின்னடைவுதானே ஏற்படும்?
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு போதை நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமை நடக்கிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை. இதை நான் பலமுறை தெரிவித்துவிட்டேன். சில கட்சிகள் எங்களோடு வரும். பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்போதுதான் முதல்முறையாக அரசியல் சூழ்நிலை பற்றி பேசி இருக்கிறோம். பாரதப் பிரதமரோ, மற்ற மத்திய அமைச்சர்களோ வரும்போது நிச்சயமாக தெரிவிக்கப்படும். எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. அதிமுகதான் ஆட்சி அமைக்கும். இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜென்சி, மிசா சட்டம் என்று தங்களை, காங்கிரஸ் ஆட்சியில் கைது செய்ததாக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு கண்காட்சியில் ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறையில் இருந்ததைப் போல் காட்டினர்.
அப்படிப்பட்ட கட்சியோடுதானே அவர்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். 1999-ல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அப்போதெல்லாம் அவர்கள் நேரடியாக ஆண்டார்களா? அவர்கள் பாஜகவின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்களா இல்லையா? 2001 சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி அமைத்திருந்தனர். எல்லா கட்சிகளும் எங்களோடும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். திமுகவுடனும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்தது.
அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி. எப்போது பார்த்தாலும் பாஜக மதவாதக் கட்சி முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அப்படி மதவாத கட்சின்னா திமுக ஏன் பாஜகவுடன் சேர்ந்தது. அதே கட்சிதானே இப்போதும் தொடர்ந்து இருக்கிறது? பிரதமர், தலைவர்கள் மாறினாலும் கட்சி அதே பாஜகதான். எங்களைப்பற்றி குறை சொல்ல ஏதுமில்லாததால் இப்படிப்பட்ட குறையை கண்டுபிடித்து ஒரு தவறான செய்தியை முதல்வர் பரப்பி வருகிறார். திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து ஆளுநரிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். எனவே, திமுக தோல்வியடைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
20-ம் தேதி தொகுதிப் பங்கீடு? – தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை பொறுப்பாளர்கள் அர்ஜுன் ராம் மெக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் – அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் 20-ம் தேதி பியூஷ் கோயல் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜன.28-ம் தேதி கன்னியாகுமரியில் பாஜக சார்பில் ப’தாமரை மகளிர் மாநாடு’ நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு இன்று (ஜன.9) சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்துக்குச் செல்லும் பாஜக மூத்த தலைவர்கள், மாநாட்டுக்கான அழைப்பிதழை நேரில் வழங்க உள்ளனர்.



