வடசென்னை கடலோரப்பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வை சிதைக்கும் திட்டமான குருடாயில் பைப்லைன் அமைக்கும் திட்டத்தை 1979-ஆம் ஆண்டு அரசு கொண்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் மூலமே பைப் லைனில் குருடாயில் திருடி பெட்ரோல் டீசல் பிஸ்னெஸ் செய்கிறார் சாய்குமார். அவரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண் 2014-ல் இன்னும் தீவிரமாக அத்தொழிலில் இறங்குகிறார்.
காவல் துறை அதிகாரி வினய் மூலமாக அத்தொழிலுக்குச் சிக்கல் வர, முடிவில் ஹீரோ எப்படி வெல்கிறார் என்பதே கதை.
ஹரிஷ் கல்யாண நன்றாக நடிக்க்கூடியவர்தான் . ஆனால் வட சென்னை வாலிபர் பாத்திரம் இன்னும் அவருக்கு சரியாக செட் ஆகவில்லை. இருந்தாலும் கோபம், போர்க்குணம் ஆகிய காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார்.
காதலுக்கு அதுல்யா ரவி, ரசிக்கும்படி இருக்கிறார். இன்னும் சில கடல் காட்சிகளை நம்பும்படி எடுத்திருக்கலாம். படத்தில் கம்பீரமாக வருபவர் சாய்குமார். குருட் ஆயில் தொழிலில் அவர் காட்டும் துணிச்சல் நம்மை கவர்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம்.
வினய் காவல் அதிகாரியாக வந்து வழக்கமான வில்லனாக தெரிகிறார். எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. விவேக் பிரசன்னா படத்தின் இன்னொரு வில்லனாக வந்து அக்கிரமிக்கிறார். கருணாஸ் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு இதுவரைக்கும் வராத புதிய கதைக்களத்தை கொண்டு வந்ததற்கு இயக்குனர் சண்முகம் முத்துச்சாமிக்கு பாராட்டுக்கள். அதை ஷார்ப்பாக சொல்லியிருந்தால் படம் வித்தியாசமானதாக கொண்டாடப்பட்டிருக்கும். முதல் பாதியில் கதை பல இடங்களுக்கு பயணித்து தொய்வடைய வைக்கிறது. இரண்டாம் பாதியில் பிரச்சார நெடி அதிகமாக இருந்தாலும் வேகமெடுக்கிறது.
சென்னையில் டீசல் குருட் ஆயில் குழாய்க்குள் இப்படி ஒரு அரசியல் ஓடிக்கொண்டிருப்பது சற்று மிரட்சியாகத்தான் இருக்கிறது. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும் திபு நினன் தாமஸ் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.