புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி மையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.
இதன்மூலம் நீதித் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால் அந்த வழக்கு மீது மிக விரைவாக விசாரணை நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வழக்குகள் விசாரணைகள் நிறைவு பெற வேண்டும்.
புதிய குற்றவியல் சட்டங்களால் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது. முந்தைய காலத்தில் ராஜஸ்தானில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 42 பேர் மட்டுமே தண்டனை பெற்றனர். புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு ராஜஸ்தானில் 60 பேருக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக்கப்படும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ‘ராஜஸ்தான் எழுச்சி அடைகிறது’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அப்போது 35 லட்சம் கோடி அளவுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
முதல்வர் பஜன்லால் சர்மா ஆட்சியில் மிக குறுகிய காலத்தில் ரூ.7 லட்சம் கோடி அளவிலான ஒப்பந்தங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து ஒப்பந்தங்களும் நடை முறைக்கு வரும். இதன் மூலம் ராஜஸ்தான் அபரிமிதமாக வளர்ச்சி அடையும். வரும் டிசம்பரில் மீண்டும் ‘ராஜஸ்தான் எழுச்சி அடைகிறது’ மாநாடு நடைபெற உள்ளது. இதில் பெருமளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.