எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் எகிப்தில் இன்று நடைபெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் குழுவினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் குழுவினர் பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் 2 ஆண்டுகளாக நீடித்தது. இதில் பாலஸ்தீன தரப்பில் மொத்தம் 67 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் விளைவாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த 9-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு பகுதி வாபஸ் பெறப்பட்டது.
அடுத்த கட்டமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைபிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளில் மீதம் உள்ள 20 பேரை ஹமாஸ் அமைப்பினர் இன்றுவிடுவிக்க உள்ளனர். இதுபோல சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.
இந்நிலையில், எகிப்தின் ஷரம் எல் ஷேக் நகரில் காசா அமைதி உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி ஆகிய இருவரும் தலைமை தாங்குகின்றனர். இதில், ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக எகிப்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் காசா அமைதி உச்சி மாநாட்டின் நோக்கம். இதன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிறுவுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான புதிய அத்தியாயத்தை திறப்பது ஆகியவையும் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் காசா அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் குழுவினரின் பிரதிநிதி பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் சென்று, நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். அதன்பின்னர் எகிப்து சென்று, காசா உச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளார்.
மத்திய அமைச்சர் பங்கேற்பு: இந்நிலையில், காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் குழுவினர் புறக்கணிப்பு: இதற்கிடையே, காசா உச்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ட்ரம்பின் நிபந்தனையை ஏற்க அவர்கள் மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாலஸ்தீனர்களின் பிரதிநிதியாக விளங்கும் அதிபர் முகமது அப்பாஸை இந்த மாநாட்டில் பேச அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.