கூகுள் இட்லிக்கு இன்று சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ளது.
தேடுபொறி தளமான கூகுள், அவ்வப்போது முக்கிய நாள்கள், முக்கிய நபர்களின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் (Doodle) வெளியிட்டு சிறப்பு சேர்க்கும்.
அந்த வகையில், இன்று கூகுள் முகப்புப் பக்கத்தைப் பார்த்த தென்னிந்திய மக்கள் எவர் ஒருவருக்கும் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும். காரணம், அங்கிருக்கும் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் இட்லியைப் பற்றியது.
Google முகப்புப் பக்கத்திலேயே கூகுள் என்ற ஆங்கில வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் இட்லி உருவாகும் விதம் முதல், அது பரிமாறப்படுவது வரை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி என்பதை அரிசி மற்றும் உளுந்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஓ என்ற வார்த்தை, இட்லி மாவு கரைத்து வைத்திருக்கும் பாத்திரம் போலவும், மற்றொரு ஓ, இட்லி பாத்திரத்தில் வேக வைப்பது போன்றும் உள்ளது. பிறகு ஜி வரிசையாக இட்லிகளை அடுக்கி வைத்தும், எல் என்ற வார்த்தை அதற்கான இணை உணவுகளைக் கொண்டதாகவும், நிறைவாக இ என்ற வார்த்தை இணை உணவுகளுடன் சேர்ந்த இட்லியை விளக்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த கூகுள் என்ற சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் அனைத்தும் தலைவாழையிலையில் பரிமாறப்பட்டுள்ளதுதான் மிகச் சிறப்பு.
உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய உணவுகளில் இட்லிக்கு முதலிடம் உண்டு. மென்மையான, ஆவியில் வேகவைக்கப்பட்டு, சட்னி, சாம்பார் என பல வகையான இணை உணவுகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தக் கூடியது இட்லி. இன்று இட்லிக்கு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறது கூகுள். அது பற்றிய விளக்கத்திலும், இன்று இட்லி கொண்டாடப்படுகிறது. அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்து ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவு என்று குறிப்பிட்டுள்ளது.
சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் பற்றி கூகுள் அளித்திருக்கும் விளக்கத்தில், இந்த இட்லி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம், அதன் உணவு மற்றும் பானங்களின் டூடுள் கருப்பொருளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது என்றும், குறிப்பாக இந்தியாவுக்கு என அக்டோபர் 11ஆம் தேதி இந்த டூடுள் கருப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட்லியின் பூர்வீகம் என்ன?
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மக்களின் உணவான இட்லி, நம் நாட்டின் பூர்வீக உணவு என்பதே பலரது நம்பிக்கை. ஆனால், இது வெளிநாட்டு உணவாக இருக்கலாம், அது இந்தியாவுக்குள் சிறிய மாற்றங்களுடன் இட்லியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தோனேசியா, இட்லியின் பூர்வீகமாக இருக்கலாம் என்ற கருத்துகளும் நிலவுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தியாவிலிருந்து வணிகம் செய்ய கப்பல் மூலம் இந்தோனேசியா சென்ற வணிகர்கள், அங்கு இட்லியை சாப்பிட்டுவிட்டு, அதன் செயல்முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு கூற்றும் இருக்கிறதாம், அரேபிய வணிகர்கள், தென்னிந்தியாவில் வணிகம் செய்ய வந்து இங்கேயே வாழத் தொடங்கியபோது, அவர்களால் இட்லி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் இருக்கின்றன.