மெட்டா நிறுவனம் ஏஐ பிரிவுக்கு திறமைவாய்ந்த அலெக்ஸாண்டர் வாங்-கை தலைமை அதிகாரியாக நியமித்துக் கொண்டது.
அலெக்ஸாண்டர் வாங், 2016-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் ஸ்டார்அப் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அவர் தனது நண்பர் லூசி குவாவுடன் இணைந்து ஸ்கேல் ஏஐ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். தங்களது கனவை நனவாக்க கடினமாக உழைத்தனர். அதன் பயனால் குறுகிய காலத்தில் ஸ்கேல் ஏஐ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அலெக்ஸாண்டர் வாங்-கின் திறமையைக் கண்டு வியந்த மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அவரை உடனடியாக தேர்ந்தெடுத்து மெட்டாவின் ஒட்டுமொத்த ஏஐ செயல்பாட்டிற்கும் தலைவராக்கினார். அத்துடன், அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் வாங்கின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 14.3 பில்லியன் டாலரையும் முதலீடு செய்தார். இது இந்திய மதிப்பில் ரூ.1.24 லட்சம் கோடி.
வாங் இப்போது மெட்டாவின் நிபுணர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்குகிறார். மேலும், மெட்டா சூப்பர் இன்டலி ஜென்ஸ் லேப்ஸ் என்ற அமைப்பின் கீழ் மெட்டாவின் ஏனைய ஏஐ, ஆராய்ச்சிக் குழுக்களும் இவரது மேற்பார்வையில்தான் செயல்படுகின்றன.
பணி நியமனம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே, மெட்டா ஏ.ஐ. குழுவை 4 தனித்தனி குழுக்களாக பிரித்து மறுசீரமைப்பு செய்ய தொடங்கிவிட்டார் வாங். சீனாவிலிருந்து நியூ மெக்சிகோவுக்கு குடியேறிய இயற்பியல் வல்லுநர் தம்பதிக்கு மகனாக கடந்த 1997-ம் ஆண்டில் பிறந்தவர் அலெக்ஸாண்டர் வாங். எம்.ஐ.டி. படிப்பை பாதியில் கைவிட்ட இவர் ஸ்கேல் நிறுவனத்தை தொடங்கினார். தனது 20-வது வயதிலேயே வாங் பில்லியனர் ஆகிவிட்டார். ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் உட்பட சிலிக்கான் வேலியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமெரிக்க எம்.பி.க்களுடன் இவருக்கு வலுவான தொடர்பு உள்ளது.