தமிழ் திரை நட்சத்திரங்களில் கொஞ்சம் மாறுபட்டவர் அஜீத்குமார். எப்படி என்றால் அவருடன் பேச அமர்ந்தால், சினிமா மட்டுமில்லாமல், சூரியனுக்கு கீழ் இருக்கும் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் உற்சாகமாக கலந்துரையாட முடியும். சில நேரங்களில் அந்த உரையாடல் அவருடைய திரைப்படங்கள் சம்பந்தமாக தொடங்கி, அவருடைய ஆர்வங்களில் ஆழ்ந்து, சமூகப் பார்வையுடனான அவரது கருத்துக்களில் கலந்துவிடும்.
வாவ் தமிழா யூடியுப் சேனலில் #AKracing என்ற நேர்க்காணலில் தனது ரேஸிங் அனுபவம் பற்றி பேசும் அஜீத், முக்கியமான கருத்து ஒன்றை பெற்றோர்களுக்கு முன்வைக்கிறார். அதை தானே முன்மாதிரியாக செய்வேன் என்று மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். இனி அஜீத்தின் மனதில் இருந்து….
‘’நான் சொல்ல விரும்புகிற முதல் விஷயம். மற்றவர்கள் என்னைப் பற்றி பேச வேண்டுமென்பதற்காக நான் ரேஸிங், ரேடியோ கண்ட்ரோல் பைலட், ஏரோ மாடலிங்கை பண்ணவில்லை. இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம் இருக்கு. அதனால் நேரம் கிடைக்கும் போது இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவது எனக்கு பிடித்திருக்கிறது.
ஒரு நடிகராக இருந்து கொண்டு இந்த மாதிரியான விஷயங்களில் நான் ஆர்வம் காட்டுவதைப் பார்த்து சில நேரங்களில் மக்களுக்கு குழப்பம் ஏற்படலாம். ஒரு நடிகராக இருந்து கொண்டு, இவற்றில் கவனம் செலுத்தினால் எப்படி என அவர்கள் நினைக்கலாம்.
எனக்கு பிடித்திருப்பதால் செய்கிறேன். ஆனால் நான் ரேஸிங் போவதால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்போ ஏற்படாமல் பார்த்து கொள்வது என் கடமை. அதிலிருந்து நான் தவறுவது இல்லை.
ஒரு நடிகராக இருந்தாலும், நீங்கள் யாரென்று களத்தில் சாதித்து காட்டும்போது மக்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுகொண்டு உங்களைப் பாராட்டுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சினிமா மட்டுமில்லை எந்த துறையாக இருந்தாலும் சரி, சாதிக்காதவர்களைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. ரேசிங்கும் அப்படிதான். முதலில் நீங்கல் உடல்ரீதியாக கட்டுகோப்பாக இருக்கவேண்டும்.. மனரீதியாக விழிப்புடன் இருக்க வேண்டும். களத்தில் இருக்கும் டிரைவிங்கில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவ்வளவுதான். உங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
ஒரு ரேஸ் கார் டிரைவரோ அல்லது மோட்டர்பைக் ரேஸரோ தன்னுடைய கார் அல்லது பைக்கில் அமரும் போது, இதுவே கூட நம்முடைய இறுதி ரேஸாக இருக்கலாம் என்பது அவர்களுக்கு தெரியும். அந்த நேரம் இருக்கவேண்டிய மன உறுதி நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும். ரேஸிங் ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம். அப்படி நீங்கள் வெளியேறினால், அவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.
அதனால் எந்தவொரு துறையாக இருந்தாலும், சாதிக்க விரும்பும் ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் சொல்லிக் கொள்கிற மாதிரியான வெற்றியை அடைவது ரொம்ப முக்கியம். இந்த வெற்றியை அடைய அவர்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு ரொம்ப ரொம்ப முக்கியம்.
இந்த விஷயத்தில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. என்னுடைய சினிமா பயணத்தில் நான் ஒரளவிற்கு வெற்றியை அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த வெற்றிக்கு காரணமான என் குடும்பத்திற்கு முதல் நன்றி. அடுத்து என் நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு நன்றி. இவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இன்று இல்லை.
எங்கள் குடும்பத்தில் யாரும் சினிமா துறையில் இருந்தது இல்லை. அப்பா மருந்துகள் துறையில் வேலைப் பார்த்தார்கள், என்னுடைய சகோதரர் பங்குச்சந்தையில் நிபுணர். நான் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் வேலைப் பார்த்தேன். பிறகு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனத்திலும் வேலைப் பார்த்தேன். அதனால் சினிமா என்பது எங்களுக்கு மிகவும் புதியது.
இந்த மாதிரியான சூழலில் தான், சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று குடும்பத்தினரிடம் சொன்னேன். அதைக் கேட்ட உடன் எல்லோருக்கும் அதிர்ச்சி. சினிமாவில் நான் என்ன செய்ய போகிறேன் என்று அவர்கள் யாருக்கும் குழப்பம் இருந்தது. ஆனால் யாரும் என்னை சோர்ந்து போவது மாதிரியான கருத்தை முன் வைக்கவில்லை. என் மீதுள்ள அக்கறையால் கொஞ்சம் யோசித்தார்கள். ஒகே உனக்கு நம்பிக்கை இருந்தால் போதும். முயற்சி செய் என்றார்கள். அவர்கள் கொடுத்த ஆதரவு, என் நம்பிகை, ரசிகர்கள் கொடுத்த அன்பினால் இன்றைக்கு நான் சொல்லிக் கொள்கிற மாதிரியான வெற்றியை அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
சினிமாவை போலவே, ரேஸிங்கிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது என்று என்னுடைய குடும்பத்தினரிடம் சொன்ன போது அவர்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி. அதிக அபாயமுள்ள ரேஸிங் உனக்கு அவசியமா என்று கேட்டார்கள். ரேஸிங் எனக்கு பிடிக்கும் என்றேன். உனக்கு விருப்பம் என்றால் தைரியமாக போய் தொடங்கு என்றார்கள்.
ரேஸிங் என்றதும், அது தேவையா… உன்னுடைய கேரியருக்கு அது அவசியமா… என கேட்டு யாரும் என்னை சோர்ந்து போகவிடவில்லை. என்னை உற்சாகப்படுத்தாவிட்டாலும், அது வேண்டாம் உனக்கு சரிப்பட்டு வராது என மனம் தளர வைக்கவில்லை.
என் பெற்றோர். என் குடும்பத்தினர் கொடுத்த இதே ஆதரவை என் பிள்ளைகளுக்கும் கொடுக்க விரும்புகிறேன். நாமோ அல்லது நம்முடைய குழந்தைகளோ எதை செய்தாலும், அதை நாம் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் கூட தேவையில்லை. ஆனால் அவர்களை உனக்கு அது வேண்டாம். வேறு ஏதாவது முயற்சி செய் என சோர்ந்து போகும் மாதிரி எதையும் செய்ய வேண்டாம்.
அவர்கள் விருப்பப்படி அவர்கள் நினைத்த இடத்தை அடையட்டும். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் உங்களுக்கு பிடித்ததை செய்யவிடாமல் டிஸ்கரேஜ் செய்யலாம். உங்கள் முயற்சியைத் தடுக்கலாம். அது நியாயமானது இல்லை.
யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை செய்ய அனுமதியுங்கள். முயற்சித்துப் பார்க்க அனுமதியுங்கள். அந்த முயற்சியில் அவர்கள் தங்களுக்கானது எது என்பதை புரிந்து கொள்வார்கள். தனக்கு எது சரியாக இருக்குமென்பதை தெரிந்து கொள்வார்கள். பிறகு தங்களுக்குரியதை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை, ஒரு தனிநபரோ அல்லது யாராக இருந்தாலும், அவர்களை நாம் ஊக்கப்படுத்தவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குறைத்து பேசுவது என்பது நியாயமானது இல்லை.’’
என்று கூறியிருக்கிறார்.