சீனாவிலிருந்து இயங்கும் மோசடி கும்பலின் கீழ் செயல்படும் சைபர் குற்றவாளிகள் அமைப்பை ராய்ப்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் சைபர் குற்றங்களைத் தடுக்க தொடங்கப்பட்ட ஆபரேஷன் சைபர் ஷீல்டின் விசாரணையில் ஒரு பெரிய திருப்புமுனையாக, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் நூற்றுக்கணக்கான மியூல் வங்கிக் கணக்குகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான சைபர் மோசடி மற்றும் பணமோசடி வலையமைப்பை சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மண்டல காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ராய்ப்பூர் சைபர் பிரிவு காவல்துறையினர், ஒடிசா, குஜராத், பிலாஸ்பூர் மற்றும் ராய்ப்பூரில் இருந்து நான்கு குற்றவாளிகளை கைது செய்து, சர்வதேச சைபர் கிரைம் சிண்டிகேட்களுடன் அவர்களை தொடர்புபடுத்தும் முக்கிய ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் நடப்பதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்தான், இவ்வளவு பெரிய மோசடி கும்பல் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது, ராய்ப்பூரில் நடத்திய காவல்துறை சோதனையில், ஜீவன் ஜோடி, ராயல் ரிஷ்டே மற்றும் இ-ரிஷ்டா என்ற பெயர்களில் இயங்கி வந்த போலி அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த அலுவலகங்களில் இருந்து எண்ணற்ற மொபைல் போன்கள், கணினிகள், சிம் கார்டுகள் மற்றும் 60 வங்கிக் கணக்குக் கருவிகள் உள்பட பெரிய அளவிலான குற்றவியல் செயல்பாடுகளுக்கு உதவும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி காவல்துறையினரின் கூறுகையில், திருமண வரன் என்ற பெயரில் www.erishtaa.com, www.jeevanjodi.com, மற்றும் www.royalrishtey.com போன்ற போலி திருமண வலைத்தளங்களை உருவாக்கி, போலி புகைப்படங்கள் மற்றும் வருங்கால மணமகள் மற்றும் மணமகன்களின் தவறான சுயவிவரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்தியா முழுவதும் இந்த போலியான இணையதளங்கள் மூலம் ஏராளமானோரிடமிருந்து பணம் மோசடி செய்யப்பட்டு, அது பல மியூல் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பின்னர் அவை அங்கீகரிக்கப்படாத செல்போன் செயலிகள் மூலம் சீனாவிலிருப்பவர்களால் ரிமோட் மூலம் பணப்பரிமாற்றத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
மியூல் கணக்கு என்பது, நமது நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வங்கிக் கணக்குகளை ஆசை வார்த்தைகள் கூறி, மோசடியாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த மோசடி கும்பலுக்கு தங்களது வங்கிக் கணக்கை பயன்படுத்தும் அதிகாரத்தைக் கொடுக்கும் நபர்களுக்கு, தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் ஒரு தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது.
இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு பலரும் தங்கள் வங்கிக் கணக்கை இதுபோன்ற மோசடி கும்பலுக்கு வழங்குகிறார்கள். ஆனால், காவல்துறை விசாரணையின்போது இவர்கள்தான் தேவையில்லாமல் சிக்குகிறார்கள். மோசடியாளர்கள் தப்பிவிடுகிறார்கள்.
இந்த வழக்கில், 79 தனியார் வங்கிக் கணக்குகள் மியூல் கணக்குகளாகவும், 17 தென்னிந்திய வங்கிக் கணக்குகள் மியூல் கணக்குகளாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.