வேலை வாய்ப்பு மோசடியில் சிக்காமல் தவிர்க்க பல்வேறு அறிவுறுத்தல்களை காவல்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வரும் விளம்பரங்களைப் பார்த்து வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
எப்போதும், அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வரும் வேலை வாய்ப்புகளை நம்புங்கள். அதுபோல, ஒரு வேலை வாய்ப்பு முகவரியை தேடும்போது, ஸ்பான்சர்டு என வந்தால் அதனை பெரும்பாலும் கிளிக் செய்யாமல் தவிர்த்து விடலாம்.
ஒரு வேலை வாய்ப்பு இணையதளத்தில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யும்முன், அதன் தனிநபர் தகவல் திரட்டுகளைப் பற்றிய கொள்கையை படியுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் வேறு யாருக்கும் பகிரப்படாது என்பதை உறுதி செய்யுங்கள்.
ஒரு நிறுவனத்தின் பெயரில் வேலை வாய்ப்பு விளம்பரம் வந்தால், அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று உறுதி செய்யுங்கள்.
பொதுவாகவே, நிறுவனங்கள், தங்களது ஆட்கள் தேவை விளம்பரங்களை வெளி ஊடகங்களுக்கு தருவது குறைவுதான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு விண்ணப்பித்தால், அந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு மின்னஞ்சலுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். மற்ற நிறுவனங்களிலிருந்து வரும் போலி மின்னஞ்சல்களை கிளிக் செய்ய வேண்டாம்.
அரசு வேலை வாய்ப்புகள் குறித்து தேடும்போது இடைத்தரகர்களை தொடர்புகொள்ளாதீர்கள்.
எப்போதும் இணையதள முகவரிகளை சரியாகப் பதிவிடுங்கள். ஒரு எழுத்து தவறாக இருக்கும் எத்தனையோ மோசடி இணையதளங்கள் இயங்கி வருகின்றன.
அரசு இணையதளங்கள் பெரும்பாலும் .gov.in, nic.in என்றுதான் முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மோசடியாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளும், உண்மையான மின்னஞ்சல் முகவரிகளைப் போலவே ஒரு சில எழுத்துகள் மட்டும் மாற்றம் செய்து இருக்கும். கவனிக்க வேண்டும்.
சில இணையதளங்கள், ரெஸ்யூமே தயாரிக்க, வேலை வாய்ப்பு குறித்து தெரிவிக்க பணம் செலுத்தி சேவை பெறும் வசதியை தருகின்றன. ஆனால், அவை உண்மையானதா என்பதை உறுதிசெய்துகொண்டு பணம் செலுத்துங்கள்.
எந்த ஒரு வேலைக்கும், வேலை அளிக்கும் நிறுவனம் பணம் கேட்காது. எனவே, வேலைக்காக பணம் செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டால் அது மோசடி என்று உறுதி செய்துகொள்ளலாம்.