No menu items!

பீலா வெங்கடேசன் காலமானார்

பீலா வெங்கடேசன் காலமானார்

பீலா வெங்கடேசன் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அரசின் பல பொறுப்புகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி, தன்னுடைய 56வது வயதில் காலமானார்.

தமிழக அரசின் முதன்மைச் செயலராக இருந்த பீலா வெங்சடேசன், கடந்த சில மாதங்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் எரிசக்தித் துறை செயலராக பணியாற்றி வந்தார்.

1997-ஆம் ஆண்டு பிகார் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு பீலா தேர்ச்சி பெற்றார். போஜ்பூர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், பிறகு மண வாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறி தனது பணியைத் தொடர்ந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியபோது, டாக்டர் பீலா ஐஏஎஸ், மக்கள் அறிந்த முகமாக மாறினார். உலகையே கரோனா என்ற பேரிடர் சூழ்ந்துகொண்டிருந்தபோது நாள்தோறும், செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தின் கரோனா நிலவரத்தை தெரியப்படுத்தி வந்தார். இவர் தமிழகத்தின் கரோனா நிலவரத்தை தெரிவிக்கும் முகமாக இருந்தார்.

மருத்துவக் கல்லூரிகளிலேயே புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்பிபிஎஸ் படித்தவர் பீலா. அடிப்படையில் மருத்துவரான பீலா, பிறகு தன்னுடைய ஐஏஎஸ் கனவை நோக்கி நகர்ந்தார். 1997ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.

பிறகு, தமிழக மாநிலப் பிரிவுக்கு மாறி, பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

தமிழகத்தில் அவர் வகித்த பொறுப்புகளை பட்டியலிட்டால், செங்கல்பட்டு சார் ஆட்சியர், மீன்வளத்துறை ஆணையர், நகர மற்றும் திட்டமயமாக்கல் துறை ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் என்ற பதவிகளை வகித்துள்ளார்.

அவர் வகித்த பொறுப்புகள் அனைத்துக்கும் தன்னுடைய அதீத திறமையாலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் குணத்தாலும் பெருமை சேர்த்தார்.

மாநிலத்தின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றி, பல்வேறு சாதனைகளைப் படைத்தார். மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம், நோயாளிகளின் தகவல்களை பதிவு செய்யும் முறையைக் கொண்டு வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் டெங்கு பரவியபோது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதனைக் கட்டுப்படுத்தினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் கரோனா பேரிடர் உச்சமடைந்திருந்த போது, சுகாதாரத் துறைக்கு தலைமையேற்றிருந்தார். பல்வேறு பதவிகளை அவர் வகித்து திறமையான நிர்வகித்திருந்த போதும், இதுபோன்றதொரு மிக முக்கிய பொறுப்பை, அதுவும் பேரிடர் காலத்தில் நிர்வகித்த அனுபவம் பெற்றிருக்காதபோதும், தன்னுடைய திறமையான நிர்வாகத் திறமையால், சுகாதாரத் துறையை சிறப்பாக இயக்கி, தமிழகத்தில் அனைவரும் அறிந்த செயலர் என்ற பெயரைப் பெற்றார்.

அமைதியான குணம், தரவுகளோடு செய்தியாளர்களை சந்திக்கும் திறன், குறிப்பிட்ட இடைவெளியில் செய்தியாளர்களை சந்தித்து தரவுகளை வெளியிடுவது போன்றவை, சுகாதாரத் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவும், மாநிலத்தின் வளர்ந்து வரும் சுகாதாரக் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் உதவியது. அவர் மீது நன் மதிப்பை மக்களிடையே ஏற்படுத்தியது.

ஊடகவியலாளர்களின் சில கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது, அவர் பொறுமையின்மையை இழப்பது, நெருக்கடி காலத்தில் அவர் சந்தித்த கடுமையான அழுத்தங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்றே கூறப்பட்டது.

பீலாவின் குடும்பமே, மக்கள் சேவைக்கு பெயர் பெற்றது. பீலாவின் தந்தை எஸ்என் வெங்கடேசன் ஓய்வுபெற்ற டிஜிபி. தாய் ராணி, முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர், நாகர்கோயில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. நாகர்கோயிலை பூர்விகமாகக் கொண்ட இவர்கள், பணி நிமித்தமாக சென்னையில் குடியேறினர். மறைந்த பீலாவுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த 1969ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார் பீலா. இவருக்கு நெருக்கமானவர்கள், இவரைப் பற்றி கூறுகையில், இலட்சியவாதி, இலக்குடன் செயல்படுபவர், பொதுவாக வெளி உலகின் பார்வையில் படாமல் வாழ விரும்புபவர் என்கிறார்கள். இதற்கு மாறாக, தமிழகத்தில் கரோனா பேரிடரின்போது சுகாதாரத் துறை செயலராக பணியாற்றி, நாள்தோறும் மக்களுக்கு கரோனா நிலவரத்தை தெரிவிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

மருத்துவம் படித்து அரசு அதிகாரியாக பணியைத் தொடர்ந்த பீலா வெங்கடேசனின் 56 ஆண்டு கால வாழ்க்கைப் பயணம் முடிவுற்றது. மருத்துவப் பணியிலிருந்து, அதிகாரமிக்க மக்கள் சேவை வரை, அவரது வாழ்க்கை அர்ப்பணிப்பு, மக்கள் பணி, குடும்பச் சூழல், உடல்நலம் என சுழன்று இன்று முடிவுபெற்றிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...