அரியலூர் மாவட்டத்தில் மதுரா கிராமப் பகுதிகளில் உள்ள நில வளத்தைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக மதிக்கப்படுகிறார் குரு.
அவரது தாத்தா காலத்தில் இருந்து சமூகத்துக்காக உழைக்கும் குடும்பமாக இருக்கிறார்கள். அவரது தந்தையும் அப்படியே இருக்கிறார்.
குருவின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.தனது தந்தையைக் கொன்றவரை மகன் குரு பழி தீர்க்கிறார்.
அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றம், நில மோசடிகள், பண முதலைகளின் ஆக்கிரமிப்பு போன்ற எதற்கும் முன்னால் வந்து நின்று தட்டிக் கேட்கிறார்.குற்றவாளிகளைத் துவம்சம் செய்கிறார். சட்டப் போராட்டம் போராடி வெற்றியும் பெறுகிறார். எனவே அப்பகுதி மக்களின் பாதுகாவலனாக மாறுகிறார். அவருக்கு உயிரையே கொடுக்கும் ஒரு கூட்டம் உருவாகிறது.
இப்படிப்பட்ட குருவை எதிர்ப்பதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஏராளமான சதிவேலைகள் செய்கிறார்கள்.ஏன் அவரைக் கொல்வதற்கே சதி செய்கிறார்கள். முதலில் சமாதானமாக பேசி ஆசை வார்த்தை பேசியவர்கள், பிறகு நேரடியாகக் களத்தில் இறங்குகிறார்கள். அவற்றை எல்லாம் எப்படி குரு சமாளித்து தான் ஒரு தலைவனாக நிற்கிறார் என்பதைச் சொல்கின்ற கதை இது.
இயக்குநர் கௌதமன்.இளைய குருவாக அவரது மகன் தமிழ் கெளதமன் நடித்துள்ளார்.ஒரு தளபதிக்குரிய தைரியமான குணத்துடன் முறைக்கும் விழிகள் விரைத்த உடம்பு என்று அந்தக் கதாபாத்திரத்தைக் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் கௌதமன்.நேர்மை உண்மை தரும் துணிவை உடல் மொழியில் காட்டியுள்ளார்.சிவந்த கண்களுடன் அவர் ஆவேசத்துடன் சண்டை போடும் காட்சிகளில் விஜயகாந்த் போலத் தெரிகிறார்.இளம் வயது காடுவெட்டி குருவாக திரையில் தோன்றும் அறிமுக நடிகர் தமிழ் கௌதமனின் நடிப்பும் சிறப்பு.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை சம்பவங்களையும், சில கற்பனை சம்பவங்களையும் மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் வ.கெளதமன், ரவுடியாகவும், சாதி வெறியராகவும் பார்க்கப்படும் மறைந்த காடுவெட்டி குருவை, மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடிய நேர்மையான மனிதராக காட்டும் ஒரு படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
ரூ.100 கோடி பணத்தை காட்டி தன் பக்கம் இழுக்க முயற்சித்த பெரும் அரசியல் கட்சியின் அழைப்பை நிராகரித்தவர், தனக்கு துரோகம் இழைத்தாலும், உயிர் உள்ளவரை பா.ம.க-வில் மட்டுமே பயணிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தவர், மக்களுக்காகவும்,மண்ணிக்காகவும் போராடிய போது, விலை பேசிய கார்ப்பரேட் முதலாளியின் ரூ.1000 கோடியை நிராகரித்தவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மற்றவர்களுக்காக மட்டுமே யோசித்தவர், என்று அவரைப் பற்றி தெரியாத பல விசயங்களை சொல்லி, வீரமிக்கவராக மட்டும் இன்றி நேர்மையானவராகவும் வாழ்ந்தவர் காடுவெட்டி குரு என்பதை இயக்குநர் வ.கெளதம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
காடுவெட்டி குரு மீதான தவறான பிம்பத்தை உடைக்கும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களை ஒரு கதையாசிரியராக கவர்ந்தாலும், கதை சொல்லல் மற்றும் ஒரு விசயத்தை காட்சி மொழியில் சொல்வதில் எந்தவித புதுமையையும் நிகழ்த்தாமல், ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக கொடுத்து சினிமா ரசிகர்களை சலிப்படைய செய்திருக்கிறார்.
நாயகியாக பூஜிதா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கௌதமினி தந்தையாக சமுத்திரக்கனி சிறிது நேரமே வந்தாலும் மிரட்டியிருக்கிறார். குருவின் இளம் வயது தோற்றமாக கௌதமனின் மகன் நடித்திருக்கிறார். அவரது தாயாக சரண்யா பொன்வண்ணன் சீற்றம் காட்டியிருக்கிறார். குருவின் நண்பனாக மன்சூரலிகான் மனதில் நிற்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்து பாடல்கள் ரசிக்க முடிகிறது. பின்னணி இசையை சாம்.சி.எஸ். அசத்தியிருக்கிறார். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு சிறப்பு.