No menu items!

எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது -அண்ணாமலை

எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது -அண்ணாமலை

வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் இந்த திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுமே மழை பெய்து கூட்டத்தை கலைத்துவிட்டது, பார்த்தீர்களா என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நகைச்சுவையாக பேசினார்.

சென்னை மணலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எந்த மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கு திருடர் பட்டம் கொடுத்தாரோ, இன்று அதே 2 பேரை வைத்து திமுக முப்பெரும் விழாவை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின், ஒரு மண் குதிரையின் மீது அமர்ந்து காவிரி கரையை நோக்கி போகிறார். வரக் கூடிய ஆற்றின் வெள்ளத்தில் மண் குதிரையெல்லாம் அடித்துக் கொண்டு போன பிறகு, அவர் தப்பிப்பதே கஷ்டமாக இருக்கும்.

மேடையில் அமர்ந்து கொண்டு பாஜகவுக்கு பாடம் எடுக்கிறார். ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மனதில் நாங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். கரூரில் திமுக சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா, சாராயம் விற்ற காசில் தான் நடந்தது. மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தவர் 3 ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தில்தான் இந்த விழா நடந்தது. இதை விட அய்யோ பாவம் என சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்துவிட்டு எப்படி சம்பாதித்த பணத்தை எல்லாம் வைத்துக் கொண்டு அதில் ஒரு விழா நடத்துறாரு. அந்த மேடையில் எங்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் ஒன்றுதான் என செல்வப்பெருந்தகை சொன்னது குறித்து கேட்கிறீர்கள். திமுகவுக்கு எடுபிடியாக ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். அந்த கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என மாற்றிட வேண்டும்.

பாஜக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்து கொண்டே இருக்கிறது. வடகிழக்கில் ஒரு மாநிலத்தை தவிர, எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில் பாஜக இருக்கிறது. எனவே செல்வப்பெருந்தகையிடம், காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் ஆட்சியில் இருக்கிறது என்பதை கேட்க வேண்டும்?

தமிழகத்தில் காங்கிரஸ் அதளபாதாளத்தில் எங்கிருக்கிறது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அனைவருக்குமே தெரிந்ததுதான். அப்படியிருக்கும் போது அவர் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்ற போது பாஜகதான் காப்பாற்றியது என எடப்பாடி பழனிசாமி கூறியதை நான் வரவேற்கிறேன். வரும் தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சியே தொடர வேண்டும் என முதல்வர் பேசிய போது மழை வந்து மக்கள் கலைந்து சென்றுவிட்டது.

தமிழகத்திலேயே இளிச்சவாயன் ஒருவர் யாரென்றால் அதுநான்தான். நான் எம்எல்ஏ கிடையாது, எம்பி கிடையாது, பஞ்சாயத்து தலைவர் கிடையாது. மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் கிடையாது. ஆனாலும் நான் ஆண்டுதோறும் எனது வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டு வருகிறேன்.

நான் சம்பாதித்து சொந்தமாக ஒரு விவசாய நிலம் வாங்கினாலும் நான் மட்டும் விளக்கம் தர வேண்டுமா? தகவல் உரிமைச் சட்டத்தில் என் நிலம் குறித்து தகவல்கள் கிடைத்துவிடும். சந்தை மதிப்பை காட்டிலும் அதிக விலைக்கு அந்த நிலத்தை அதிகாரப்பூர்வமாக வாங்கியிருக்கிறேன். அரசுக்கு வரியும் செலுத்தியிருக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் கழித்து இயற்கை விவசாயம் செய்கிறேன் என்பதை பாருங்கள்.

இதை எதிர்க்கட்சிகள், அப்ப நிலம் வாங்க காசு யார் கொடுத்தது என கேட்கிறார்கள். நானும் என் மனைவியும் வேலை வெட்டி செய்யாமல் ரோட்டில் சும்மாவா உட்கார்ந்திருக்கிறோம். கோவையில் நான் வாங்கிய நிலம் குறித்து தாசில்தாரை வைத்து மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்டிய வரியையும் அறிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு எனது வருமான வரிக் கணக்கையும் நான் வெளியிடுவேன். எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது அது குறித்தெல்லாம் யாரும் கேட்கமாட்டீங்க என அண்ணாமலை பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...