ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
உலகளவிலான பொருளாதார நிச்சயமற்றத் தன்மை, அமெரிக்காவின் வர்த்தக போரால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் பங்குச்சந்தை முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால், நிகழாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரன் சுமார் ரூ.20,000-க்கும் மேல் உயர்ந்தது.
சென்னையில் இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை உயா்ந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.81,920- என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பின்னர், சனிக்கிழமையும், அதைத்தொடர்ந்து திங்கள்கிழமையும் சேர்த்து ரூ.280 குறைந்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 16) அதிரடியாக கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,280-க்கும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதம் துவங்கவிருப்பதால், வரும் நாள்களில் சுப நிகழ்ச்சிகள் குறைவு என்பதாலும் தங்கத்தின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலகளவிலான பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக விலைக் குறைவுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகவும், வருங்காலங்களில் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒருபுறம் மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தாலும், எந்தவித ஆரவாரமுமின்றி வெள்ளி விலையும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.