சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அவற்றை பயன்படுத்த முடியாமல் இளைஞர்கள் தவித்து வந்தனர்.
இதையடுத்து சமூக வலைதளங்கள் மீதான தடையை விலக்க கோரியும், நாட்டில் பரவியுள்ள ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்மாண்டுவில் பேரணி நடத்தினர். அப்போது நியூ பனேஷ்வரில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை வீசி எரிந்தும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து,போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் மூண்டது.பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் பரவி வருவதையடுத்து இந்தியா-நேபாளம் எல்லையில் விழிப்புடன் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாள உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, சமூகவலைதள நிறுவனங்கள் பதிவு செய்யவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்தது. இந்த நிலையில், பதிவு செய்துகொள்ளாத பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட26 சமூக வலைதளங்களை கடந்த வெள்ளிக்கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடி ஆகியவற்றை சுட்டிக்காட்டி இதேபோன்று, கடந்த ஜூலையில் டெலிகிராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.