பல கண்டெயினர்களில் வித விதமான துப்பாக்கிகளை தமிழகத்தில் இறக்குமதி செய்கிறார் வில்லன். அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து அதன் மூலம் அமைதியான தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவ வைக்க நினைப்பதே திட்டம். இதனை அப்நார்மலாக இருக்கும் நாயகன் எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதை.
விஜய் சிவ கார்த்திகேயன் கையில் துப்பாக்கியைக் கொடுத்தாலும் கொடுத்தார், அதை ஏதோ ஆஸ்கர் விருதே கிடைத்து விட்டது போல பல படங்களில் அதை குறிப்பிட்டு வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக அந்த துப்பாக்கியை வைத்து ஒரு திரைப்படமே எடுக்க நினைத்ததன் விளைவுதான் மதராஸி படம்.
கண்டெயினர்களில் துப்பாக்கிகளை கடத்தும் வரை போலீஸ், என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் அதை கண்டுபிடிக்காமல் இருந்தது, அதை கேஸ் பேக்டரிக்குள் வைத்து பாதுகாக்கும் கும்பல் என்பதெல்லாம் நம்பமுடியாத, நமக்கு நெருக்கமாக இல்லாத ஒரு சூழல் என்பதால் படத்தோடு நம்மால் ஒட்டவே முடியவில்லை. அதே போல சிவ கார்த்திகேயனின் பாத்திரப் படைப்பு கொஞ்சமும் முழுமை பெறாமல் இருப்பதால் படத்தில் அவரது நடிப்பும் எடுபடவில்லை.
பூகம்பம் வந்து பேசும் காட்சியும், நண்பர்கள் அவரை கேலி செய்வதும் அப்படியே நாடகத்தனம். சீரியஸ் சூழல் மறந்து சிரிப்புதான் வருகிறது. இது போல பல காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் படம் எப்போது முடியும் என்கிற நிலை.
நாயகி ருக்மிணி வசந்த் இயல்பாக நடித்திருந்தாலும் மொத்த திரைக்கதையும் ஏனோ தானோ என்று இருப்பதால் அவரது நடிப்பு வீண்.
என்.ஐ.ஏ. அமைப்பின் அதிகாரி பிஜூ மேனன் தன் மகன் விக்ராந்த் இறந்து போனதற்கும் மட்டும் வருந்துவதும். 14 அதிகாரிகளை உயிர் பலி கொடுத்தும் தொடர்ந்து அவர் அந்த ஆப்ரேஷனை செய்வதும் திரைக்கதையில் கவனக்குறைவு.
முழு படமும் சமீப காலமாக செய்தி தாள்களில் அடிபடும் என்.ஐ.ஏ. சோதனை, புஷ்பா படத்தில் பேசப்பட்ட சிண்டிகேட் போன்ற விஷயங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட கதையாகவே தெரிகிறது. இதனால் முழு படமும் வலிந்து எழுதப்பட்ட படைப்பாகவே இருக்கிறது.
இதில் அனிருத் இசை எஸ்.கே. சொந்தக்குரலில் பாடி அறிமுகம் ஆகும் காட்சியில் பாடல் மட்டும் இன்னொரு குரலில் வரும்போது அபத்தமாக தெரிகிறது. பின்னணி இசை காட்சிகளை பலமாக்குகிறது. எந்தவிதத்திலும் நம்மை தொடர்புப்படுத்தாத கதையாலும், புதிதாக கற்பனை இல்லாத திரைக்கதையாலும் சலிப்பூட்டுகிறது. சண்டைக்காட்சிகள் மட்டும் கடும் உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது. கெவின் குமாருக்கு பாராட்டுகள். அதே போல் சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
எப்பேர்பட்ட காவியமாக இருந்தாலும் 2 மணி நேரத்தில் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்பதை படக்குழு உணர வேண்டும். பட படங்களில் பார்த்த அதே காட்சிகள். வில்லனின் எகத்தாள சிரிப்பு என்று ஏ.ஆர். முருகதாஸ் ஓய்வுக்காலத்தின் சிந்தனையை கதையில் காட்டியிருக்கிறார்.
ஹீரோவுக்காக கதை எழுதுவதும், வெற்றி பெற்ற இயக்குனருக்காக ஹீரோ படம் பண்ணுவதும் என்பதும் தோல்விக்கான முயற்சிகளே.