பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாததாலும், எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததாலும் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் அறிவித்தார்.
இதனால், இந்திய ஏற்றுமதியில் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் சூழலில் சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் சீன, ரஷிய அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.மேலும், சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் தனித்தனியே நடத்தினார்.
இதனிடையே, மூவரும் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்த டிரம்ப், ”இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டோம் எனத் தெரிகிறது, அவர்கள் ஒன்றாக நீண்டகால வளமான எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், இந்தியா குறித்து பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
இந்தியாவை சீனாவிடம் இழந்ததற்கான காரணம் என்ன?
நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அதுபற்றி அவர்களிடம் விளக்கினேன், ஏற்றுக்கொள்ளாததால் மிகப்பெரிய வரியை இந்தியாவுக்கு விதித்தோம். 50% என்பது அதிக வரிதான்.
இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பீர்களா?
கண்டிப்பாக செய்வேன், மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். குறிப்பிட்ட நேரத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயானது சக்திவாய்ந்த உறவு, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன்.