முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
எம்ஜிஆர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்த எஸ்.டி. சோமசுந்தரத்தையே மீண்டும் கட்சியில் இணைத்தார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில், 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அப்போது குள்ளம்பாளையம் கிளைச் செயலாளராக இருந்தேன். 1975 ஆம் ஆண்டு கோவையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அரங்கநாயகம் தலைவராகவும், திருப்பூர் மணிமாறன் செயலாளராகவும் நான் பொருளாளராகவும் எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டோம்.
திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவர், போட்டியிட்டு இந்தியாவிலேயே 2,37,000 ஓட்டுகளை கூடுதலாக பெற்றிருந்தார். 1977-ஆம் ஆண்டு நான் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட நினைத்தேன். ஆனால் எம்ஜிஆரோ, சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார்.
நானோ அவரிடம் போய் எனக்கு புதிய தொகுதி, எப்படி போட்டியிடுவது என்று! அதற்கு எம்ஜிஆர், “என் பெயரை உச்சரி” என்றார். அதன் பிறகு நான் சத்தியமங்கலம் தொகுதியில் வென்றேன். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இயக்க்தை வழிநடத்த ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் இறந்த பிறகு சசிகலாவை தலைமையேற்க அழைத்தோம்.
அதன் பின்னர் நடந்தது எல்லாம் தெரியும். யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வி வந்த போது சசிகலா, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை முன்மொழிந்தார். அப்போது பல்வேறு சோதனைகளை தாண்டி இந்த இயக்கம் நடந்தது.
எனக்கு இரு வாய்ப்புகள் கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் கட்சி உடையக் கூடாது என்பதுதான். 2017இல் அதிமுக ஆட்சிக்கு பிறகு 2019, 2021, உள்ளாட்சி தேர்தல், 2024 ஆகிய தேர்தல்களில் தோல்விதான் கிடைத்தது.
2024 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் 30 இடங்களில் அதிமுக வென்றிருக்கும். கழகம் ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளரை 6 முன்னாள் அமைச்சர்கள் போய் சந்தித்தோம். ஆனால் அவர் எதையும் ஏற்கவில்லை.
மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் அரவணைத்தால் மட்டுமே வரும் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறலாம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர்கள் எந்த நிபந்தனையுமின்றி கட்சி பணியாற்ற தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியில் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்காமல் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டார்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவர் மீது எஸ்.டி. சோமசுந்தரம், இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அப்போது அவர்களை வீடு தேடி போய் சந்தித்த எம்ஜிஆர், கட்சி பணியாற்றிட வாருங்கள் என அழைத்தார். அது போல் யாராவது இவர்கள் (எடப்பாடி) மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்களா? அது போல் காளிமுத்து, கண்ணதாசன் உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய போது கூட அவர்களில் சிலருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார். அதாவது எம்ஜிஆர், ஜெயலலிதாவை பொருத்தமட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சி பணியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். அதைதான் நானும் வலியுறுத்துகிறேன்.