பகுதி – 2
ஒரே பாடலில் உலக இசைக்கு நடத்திய பாடம்
ஒரு பாடலை கேட்டும் ரசிகனுக்கு அது எந்த ராகத்தில் அமைந்திருக்கிறது என்பதையும், அதன் ஸ்வர வரிசை என்ன என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதன் உணர்வுகளில் அவன் லயித்துப் போவதில்தான் பாடலின் வெற்றி இருக்கிறது. ஆனால் ஒரு நல்ல சொற்பொழிவை கேட்டால் அதை நிகழ்த்தியவரைப் பற்றி தெரிந்து கொள்ள இயல்பாகவே மனம் அவரை பற்றிய விபரங்களை தேடும்.
அப்படி நம்மை கிறங்க வைத்த ஒரு பாடல் என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது.
ஏன் அந்த பாடலுக்கு மட்டும் அப்படி ஒரு தன்மை வந்தது என்பதை தெரிந்து கொண்டால் அதிலும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.
அதோடு இந்த ராகத்தைப் பற்றி இசையமைத்த இளையராஜா என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டபோது மீண்டும் இந்தப்பாடலைக் கேட்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
கடவுள் அமைத்த மேடை என்ற திரைப்படம் 1979ல் வெளிவந்தது. எஸ்.பி. முத்துராமன் இயக்கம். கொல்லப்பூடி மாருதிராவ் கதையை கவிஞர் வாலி அவர்கள் திரைக்கதையாக எழுதியிருந்தார். படத்தின் அனைத்துப் பாடல்களும் அவரே.
நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
என்ற பாடல் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிக்கப்படுகிறது.
ஆளாளுக்கு மனதில் ஏதோ ஒரு நினைவுகளைக் கொண்டுவந்து சேர்க்கும். பாடலின் இசைக்கோர்ப்பும், வாத்தியக் கருவிகளை கையாண்டிருக்கும் தன்மையும் இந்த டெக்னாலஜி காலத்திலும் மறக்க முடியாத பாடலாக இது இருக்கிறது.
ஒரு நாள் இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்த தருணத்தில் ஐயா இந்த பாடல் கேட்கும்போது எனக்கு மனதில் ஏதோ செய்யும் உணர்வு எற்படுகிறது என்றேன்.
அதற்கு ராஜா சார் ஒனக்கு மட்டுமில்லைய்யா எல்லோருக்குமே என்று சொல்லி விட்டு அதான் ஹம்சத்வனி என்றார் மெல்லிய குரலில்.
அப்போதே ஹம்சத்வனி ராகத்தைப்- பற்றி தெரிந்து கொள்ள மனம் துடித்தது.
இந்த ராகத்தை வித்தியாசமான முறையில் இந்தப் பாடலில் ராஜா சார் கையாண்டிருக்கிறார் என்பதுதான் இதன் சிறப்பு.
இதற்கு முன்பு ஹம்சத்வனி ராகத்தில் திரைப்படப்பாடல்கள் வந்ததில்லையா ?
வந்திருக்கிறது.
நமக்கு தெரிந்த பாடல்களாக பார்த்தால் 1980ம் ஆண்டு வெளிவந்த சாவித்ரி படம். இதில் எம்.எஸ்,.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த,
மழைக்காலமும் பனிக்கா….லமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
ப..ர..வ..ச..ம் அடைகின்ற இதயங்களே
இந்தப்பாடல் என்ன வகையான உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்துகிறதோ அதே உணர்வு பலருக்கு மயிலே மயிலே உன் தோகை எங்கே என்ற பாடலை கேட்கும்போது கிடைக்கும்.
இதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இந்தப் பாடலில் மெல்லிசை மன்னர் தன் வழக்கமான வயலின் மழை பொழிந்திருப்பார்.
ஆனால் மயிலே மயிலே பாடலில் ஹம்சத்வனியை ராஜா சார், எப்படி கையாண்டிருக்கிறார் என்பது பற்றி இசைஞானியே சொன்னது,
ஹம்ஸத்வனி ராகத்தை தெருவில் போகிறவர்கள்கூட பாட வேண்டும் என்று விரும்பினேன். அப்படி உருவானதே மயிலே மயிலே உன் தோகை எங்கே பாடல். அதில் வரும் ஆர்க்கெஸ்ட்ராவில் நம் நாட்டு மிருந்தங்கத்தை உபயோகப்படுத்தியிருக்கிறேன். கிளாசிக்கல் கிடாரை கிராமத்து நடையிலும், புல்லாங்குழல், போல்க் ரிதம், வயலின், பேஸ் கிடார் என்று எல்லா இசைக்கருவிகளையுமே உபயோகித்து இசை என்பது ஒன்றுதான் என்பதைக் காட்டியிருக்கிறேன்.
இங்கே எனது ரசிகர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நமது இசையில் ஹார்மனி இல்லை counrter point இல்லை என்பது வெளிநாட்டுக் காரர்கள் சாதரணமாக சொல்லும் குற்றச்சாட்டு. அதை தவறு என்பதை சுட்டிக்காட்டவே கிராமிய பாடல்களில் ஹார்மனிக் பேக் ரவுண்டில் நல்ல ராகங்களில் அமைத்துத் தருகிறேன். இது ஒரு பொன் மாலை பொழுது, பூங்கதவே தாழ்திறவாய், பாடல்களிலும் மேற்கத்திய ஸ்டைலில் பின்னணி இசையை அமைத்திருக்கிறேன். இதே போல மச்சானை பார்த்தீங்களா, சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல்களில் வரும் ஹார்மனியை இதறகு நல்ல உதாரணங்களாகச் சொல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.
இந்தப் பாடல்களைக் கேட்கும் நமக்கு அது பாடல் மட்டுமே. ஆனால் இசைஞானி இளையராஜாவுக்கோ அது உலகத்தில் எங்கோ இருக்கும் இன்னொரு மியூசிக் கம்போஸர்களுக்கு சொல்லும் பதிலாக இருக்கிறது. அல்லது அவர் நடத்தும் பாடமாக இருக்கிறது.
அப்படி ஞானியார் நடத்திய ஹம்ஸத்வனி பாடத்தைத்தான் நாம் மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே என்று பாடலாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.