இந்திய அஞ்சல்துறையில் பதிவு தபால் சேவையை செப்.1-ம் தேதி முதல் நிறுத்தி, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தற்போது அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை சேவை “கம்பெனி மெயில்” என்ற பெயரில் கடந்த 1766-ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சியில் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இது, 1854-ம் ஆண்டு டல்ஹவுசி பிரபுவால் சீரமைக்கப்பட்டு, அஞ்சல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே அதிகாரப்பூர்வ இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்ட ஆண்டாக கருதப்படுகிறது.
தற்போது, இந்திய அஞ்சல் துறையில் 1.59 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதன்மூலம், உலகின் மிகப்பெரிய அஞ்சல்துறையாக இந்திய அஞ்சல்துறை செயல்படுகிறது. இந்திய அஞ்சல் துறை மூலமாக பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் நிலையில், இவற்றில் பதிவு தபால் சேவை முக்கியமானதாக இருக்கிறது. பதிவு தபால் சேவை கடந்த 1854-ல் இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நீதிமன்றம், வங்கி, அரசு துறை சார்ந்த கடிதங்கள் உள்ளிட்டவை பதிவு தபால்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. முக்கிய ஆவணங்கள், சான்றுகளை அனுப்பும் போது, வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக பதிவு தபால்கள் இருக்கின்றன. அதாவது, பதிவு தபால் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரே பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். பாதுகாப்பான ஆவண விநியோகத்துக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் நம்பகமான சேவையாக இருக்கிறது.
இதற்கிடையில், அஞ்சல் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் நோக்கில், 171 ஆண்டு கால சேவையாக திகழும் பதிவு தபால் சேவையை செப்.1-ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாகவும், விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதாவது, டிஜிட்டல் விருப்பங்களால், பதிவு செய்யப்பட்ட தபால் பயன்பாடு குறைந்துள்ளதாகவும், மேம்பட்ட கண்காணிப்பு, வேகமான விநியோக நேரம் மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் கொண்ட விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதிவு தபால் சேவையை நிறுத்தி, விரைவு தபால் சேவையுடன் இணைக்கும் நடவடிக்கை அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்தியஅஞ்சல் துறை அண்மையில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை: முகவரி சார்ந்த விநியோகத்துக்கான அடிப்படை தபால் சேவையாக விரைவு தபால் கடிதம் மற்றும் விரைவு தபால் பார்சல் ஆகியவை இனிமேல் இருக்கும். பதிவு தபால் என்பது விரைவு தபால்களுக்கு மட்டுமே மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக கிடைக்கும்.
முகவரிதாரருக்கு குறிப்பிட்ட விநியோகத்தை வழங்கும். பிற வகை தபால்களுக்கு பதிவு கிடைக்காது. வளர்ந்து வரும் சந்தை தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இது மாற்றப்பட்டு வரவுள்ளது.
விரைவு தபால் மற்றும் பதிவு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட சேவைக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் சேவை விதிமுறைகள் அவ்வப்போது துறையால் அறிவிக்கப்படும். இந்த புதிய நடைமுறை அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.