தில்லி, என்சிஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமா்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
மேலும், தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதியை மதிப்பிடாமல், தெரு நாய்களை காப்பகங்களில் வைக்க வேண்டும் என்ற ‘பொதுவான உத்தரவு’ அதைச் செயல்படுத்த முடியாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு பிறப்பித்த சில உத்தரவுகளுக்கு தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனுவை நீதிபதி விக்ரம் நாத் தலைமையில் நீதிபதிகள் சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா இடம்பெற்ற அமா்வு விசாரித்து வெள்ளிக்கிழமை அளித்துள்ள விரிவான உத்தரவு வருமாறு:
தில்லி – என்சிஆா் பகுதியிலிருந்து பிடிக்கப்படும் அனைத்து தெருநாய்களையும் மாநகராட்சி காப்பங்கள் அல்லது அடைக்கப்பட்ட இடங்களில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு, மனிதவளம், கால்நடை மருத்துவா்கள், கூண்டுகள் மற்றும் பிடிபட்ட நாய்களின் போக்குவரத்துக்கு பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான தளவாடங்கள் தேவைப்படும்.
ஒட்டுமொத்த தெருநாய்களின் எண்ணிக்கையையும் அவற்றை பிடிப்பதற்கான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன்பாக, மாநகராட்சி போன்ற அமைப்புகளிடம் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளங்கள் போதிய அளவில் இருக்கிா எனப் பாா்ப்பது அவசியமாகிறது என்பதை மறுக்க முடியாது.
கருத்தடை மற்றும் நோய்த் தடுப்புக்குப் பிறகு, நாய்களை அதே இடத்தில் இடமாற்றம் செய்ய வகை செய்யும் விதி மூலம் முதலாவதாக நாய் காப்பகங்கள், அடைக்கப்படும் இடங்களில் நெரிசல் வாய்ப்பைத் தடுக்கிறது. இரண்டாவதாக, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பிறகு, பிடிக்கப்பட்ட தெருநாய்கள் அவை முன்பு வாழ்ந்த அதே சூழலுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் கருணையுள்ள அணுகுமுறையாகும்.
மேலும், தீவிரமான கருத்தடை அறுவை சிகிச்சையானது, தெருநாய்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதை நிச்சயமாகக் கட்டுப்படுத்தும். இது இறுதியில் நாய்களின் எண்ணிக்கை குறைவதற்கும் வழிவகுக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதே விவகாரத்தில் நாடு முழுவதும தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும், இறுதியாக தேசிய கொள்கை அல்லது முடிவு எடுக்க ஏதுவாக உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனா்.
விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாடு (ஏபிசி) விதிகள் விண்ணப்பம் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சோ்க்க உத்தரவிட்டது. அத்துடன் மேலும் சில வழிகாட்டுதல்களை வழங்க ஏதுவாக எட்டு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கப் பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தீா்ப்பின் முக்கிய அம்சங்கள்
* ரேபீஸ் பாதிப்பு அல்லது பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்களுக்கு இடமாற்றம் பொருந்தாது.
* ரேபீஸ் பாதிப்பு அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படும். ஆனால், அவை மீண்டும் வீதிகளில் விடப்படாது. காப்பகம் அல்லது அடைப்புப்பகுதியில் வைக்கப்படும்.
* தில்லி – என்சிஆா் பகுதியின் நகராட்சி அதிகாரிகள் தில்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரீதாபாத், குருகிராமில் உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்து தெரு நாய்களைப் பிடிக்கவும், நாய் காப்பகங்கள் அல்லது நாய்கள் அடைப்புப் பகுதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 11- ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உள்ளாட்சிஅமைப்புகள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும்.
* ஒவ்வொரு நகராட்சி வாா்டிலும் தெரு நாய்களுக்கு பிரத்யேக உணவளிக்கும் இடங்களை உருவாக்கும் பணியை தில்லி – என்சிஆா் நகராட்சி அதிகாரிகள் தொடங்க வேண்டும்.* மக்கள்தொகை, தெருநாய்களின் செறிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உணவளிக்கும் பகுதிகள் உருவாக்கப்படும் அல்லது அடையாளம் காணப்படும். அத்தகைய உணவளிக்கும் பகுதிகளுக்கு அருகே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
* வீதிகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பது எந்த நிபந்தனையின் கீழும் அனுமதிக்கப்படாது.
* உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்போா் கண்டறியப்பட்டால் தண்டிக்கப்படுவா்.
* உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் சம்பவங்களைப் புகாரளிக்க ஒவ்வொரு நகராட்சி நிா்வாகமும் ஒரு பிரத்யேக உதவி தொலைபேசி அழைப்பு எண்களை உருவாக்க வேண்டும்.
தெரு நாய்கள் வழக்கு கடந்துவந்த பாதை…
தெரு நாய்கள் தொடா்புடைய வழக்கு கடந்த வந்த பாதை விவரம் தேதிவாரியாக வருமாறு:
ஜூலை 28: தில்லியில் ரேபீஸ் பிரச்னைக்கு வழிவகுத்த நாய்க் கடி சம்பவம் குறித்த ஊடக செய்தியை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சில உஷாா்படுத்தும் மற்றும் கவலைக்குரிய புள்ளிவிவரங்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது.
ஆகஸ்ட் 11: தெருநாய் கடி காரணமாக, குறிப்பாக குழந்தைகளிடையே மிகவும் மோசமான சூழ்நிலை இருப்பதாக குறிப்பிட்டு, தில்லி, என்சிஆா் பகுதி தெருக்களில் இருந்து தெருநாய்களைப் பிடித்து கூடிய சீக்கிரம் நிரந்தமாக காப்பகங்களுக்கு இடமாற்றுமாறு உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 11-12: இந்த உத்தரவைத் தொடா்ந்து பரவலான போராட்டங்கள் நிகழ்ந்தன.
ஆகஸ்ட் 13: தெருநாய்கள் தொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு வந்தபோது, ‘இதுகுறித்து நான் பாா்ப்பேன்’ என்று தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கூறினாா்.
ஆகஸ்ட் 14: தில்லி – என்சிஆரில் தெருநாய்களின் ஒட்டுமொத்த பிரச்னைக்கும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்து வழங்குதல் தொடா்பான விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்துவதில் உள்ளூா் அதிகாரிகள் எதுவும் செய்யாததே காரணம் என்று மூன்று நீதிபதிகள் சிறப்பு அமா்வு கூறியது.
மேலும், ஆகஸ்ட் 11 அன்று பிறப்பிக்கப்பட்ட சில உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.