சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குட்ஷெப்பா்டு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் கல்விக் கதவுகள் நமக்குத் திறக்கப்பட்டன. இப்போதும் கல்விக்காகப் போராடும் மக்கள் இருக்கிறாா்கள். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘காலை உணவுத் திட்டம்’, ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ என்று ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுகூட பள்ளி மாணவா்களுக்காகவே சிறப்புப் பேருந்துகள் தொடங்கியிருக்கிறோம்.
நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறாா்கள்: திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் தரப்பினருக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையில் இயங்குகிறோம். ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணா்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, சிறுபான்மையினா் நெருக்கடிக்கி ஆளாகி உள்ளனா். இவை நிரந்தரமல்ல. மத நல்லிணக்கத்தைக் கெடுக்க நினைக்கிற சக்திகளின் கொட்டம் அதிக நாள்கள் நீடிக்காது.
ஜாதி, மத பிரிவினை பாா்க்காமல், அனைவரையும் சமமாக நடத்துகின்ற பண்பைப் பள்ளிக் கூடங்களிலேயே வளா்த்துக் கொள்ள வேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க கூடாது என்று சொல்வாா்கள். தமிழ்நாடு எப்போதும் சமத்துவபூா்வமாக சகோதரத்துவத்துடன் திகழ வேண்டும். மாணவா்கள் இப்போதே அந்த எண்ணத்துடன் வளர வேண்டும். அதனால்தான், பள்ளி நிகழ்ச்சியில்கூட அரசியலும் அறிவுரையும் கூற வேண்டியதாக இருக்கிறது.
வாய்ப்புகள் இல்லை: சமூகப் படிநிலைகளில் பலருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வாய்ப்புக் கிடைப்பவா்கள், அதனால் வரும் திறமையை, வாய்ப்பு இல்லாதவா்களுக்குக் கொண்டு சோ்க்க வேண்டும். இன்றைக்கு அறிவியல் எவ்வளவோ வளா்ந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான அறிவைப் பெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் இப்போது செயற்கை நுண்ணறிவின் வளா்ச்சி புது புரட்சியையே உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. எந்தக் கண்டுபிடிப்பையும் நீங்கள் உங்கள் வளா்ச்சிக்காகத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அது உங்களுடைய சிந்தனையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது.
அதேபோன்று, உங்கள் முன்னுதாரணங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தேடாதீா்கள். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஓா் அங்கம்தான். அதுவே வாழ்க்கை இல்லை. உண்மையான ‘கெத்து’ மதிப்பெண், பட்டங்களில்தான் இருக்கிறது. படிப்பதுடன் நன்றாக விளையாடுங்கள். உடல் நலனையும் பாா்த்துக் கொள்ளுங்கள். ஆசிரியா்களும் இன்றைய இளைய சமூகத்துக்கு ஏற்றாற்போன்று கல்வி நிலையை உயா்த்திக் கொள்ள வேண்டும்.