தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் மீதும் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி 16 நாள் யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் இரண்டாவது நாளான நேற்று கயாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்தின் ‘வாக்கு திருட்டு’ பிடிபட்ட பிறகும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு என்னிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ‘வாக்கு திருட்டு’ என்பது பாரத மாதாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல்.
எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள், ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம். அப்போது முழு நாடும் உங்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கும் என்று நான் தேர்தல் ஆணையத்திடம் சொல்ல விரும்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புத் தொகுப்பு பற்றிப் பேசுவது போல, தேர்தல் ஆணையம் பிஹாருக்கு சிறப்பு தீவிர திருத்தம் என்ற சிறப்புத் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வந்துள்ளது, அதாவது புதிய வடிவிலான வாக்குத் திருட்டு. தேர்தல் ஆணையர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் ஒரே குரலில் தங்கள் மாநிலத்தில் ‘வாக்கு திருட்டு’ செய்ய முடியாது என்று பிஹார் மக்கள் கூறுவார்கள்.