கடல்சார் வணிகத்தில் உலகளவில் முக்கிய பங்கு வகித்த பண்டைய நாகரிகங்களில் ஒன்று இந்தியா. நமது கடல்சார் வரலாறு கிமு 3ஆம் மில்லினியத்தில் இருந்தே தொடங்குகிறது. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நாடு என்பதுடன் சர்வதேச கப்பல் பாதைக்கு மிக நெருக்கமாக இருக்கும் நாடு என்பதும் இந்தியாவின் பலம்.
ஆனால், வரலாற்றில் எங்கோ ஒரு இடத்தில் இந்த பெருமையை தவறவிட்டுவிட்டோம். இன்று, உலகின் பெரிய சர்வதேச துறைமுகங்களுக்கு இணையான ஒரு துறைமுகம்கூட இந்தியாவில் இல்லை. இதனால், இந்தியா வெளிநாடுகளின் துறைமுகங்கள் உதவியுடனே கப்பல்களில் சரக்குகளை அனுப்பி வருகிறது. இந்தியாவிற்கு வர வேண்டிய சரக்குகள் சிங்கப்பூர், கொழும்பு, துபாய் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து சிறு சிறு கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும் சிறுசிறு கப்பல்கள் வழியாக சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், இந்தியாவிற்கு பல்வேறு வகையில் வருவாய் இழப்பு!
இந்தியாவின் 75% சரக்குகள் வெளிநாட்டுத் துறைமுகங்கள் வழியாக செல்வதால் இந்தியத் துறைமுகங்களுக்கு ஆண்டுக்கு $200-220 மில்லியன் வருவாய் இழப்பு. ஏற்றுமதியாளர்களுக்கோ ஒரு கண்டெய்னருக்கு $80-100 கூடுதல் செலவு.
இதற்கு என்ன தீர்வு?
“தீர்வை தேடி எங்கும் போகவேண்டியதில்லை. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதானி விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் இதற்கு ஒரு முடிவாக ஏற்கெனவே உருவாகிவிட்டது” என்கிறார்கள் இந்த துறை சார்ந்தவர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், தற்போது இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்படும் அதானியேதான்!
திருவனந்தபுரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அரபி கடலோரம் இருக்கிறது, விழிஞ்சம். இயற்கையாகவே ஆழமான கடற்கரையை கொண்ட பகுதி என்பதால், பழங்காலத்தில் இருந்தே இங்கு துறைமுகம் செயல்பட்டு வந்திருக்கிறது. இது சங்க காலத்தில் பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. பாண்டியர்கள் விழிஞ்சத்தை தங்கள் துறைமுகமாக பயன்படுத்தியதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சேர நாட்டுடன் போரிடும்போது, விழிஞ்சம் ஒரு போர் மையமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 8 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை விழிஞ்சம் ஒரு முக்கியமான துறைமுகமாக இருந்துள்ளது. அதன்பின்னர், விழிஞ்சத்தை பயன்படுத்துவோர் குறைந்து மதிப்பிழந்தது. சாதாரண மீன்பிடித் துறைமுகமாக கவனிப்பாரின்றி 6 நூற்றாண்டுகள் ஓடிவிட்டது.
இந்நிலையில்தான், “இந்தியாவுக்கு ஒரு பெரிய சர்வதேச துறைமுகம் வேண்டும்; அதை எங்கே அமைக்கலாம் என்ற நீண்ட ஆய்வுகளின் முடிவில் மீண்டும் விழிஞ்சம் புத்துயிர் பெற்றது. கேரளா மாநில அரசு, ஒன்றிய அரசு, அதானி குழுமம் கூட்டு முயற்சியில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கேரள அரசும் அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட் (AVPPL) நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் 2054 வரை, அதாவது 40 வருடங்களுக்கு செல்லுபடியாகும். ஒப்பந்தத்தின்படி, 2028 வரை துறைமுகத்தின் மொத்த வருமானத்தையும், துறைமுக உருவாக்கத்தில் பெரும்பகுதியை செலவு செய்யும் அதானி குழுமமே எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு, 2054 வரை ஒவ்வொரு வருடமும் 40 சதவீத வருமானத்தை 1% சதவீத வட்டியுடன் கேரள அரசுக்கு கொடுக்க வேண்டும். இதன்பின்னர், படிப்படியாக அரசுக்கு செல்லும் வருமானத்தின் அளவு அதிகரிக்கப்பட்டு, கடைசியில் முழு வருமானமும் அரசுக்கு செல்லும்படி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
2014-ல் ஆரம்பிக்கப்பட்ட துறைமுகத்தின் முதல்கட்ட பணிகள் 2024 டிசம்பரில் முடிவடைந்தது. துறைமுகத்தை கடந்த மே மாதம் 2ம்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், அதற்கு முன்பே கடந்த 2024 ஜூலையில் சோதனை ஓட்டம் தொடங்கிவிட்டது. 2024 ஜூலை முதல் தற்போது வரை 415 சரக்கு கப்பல்கள் விழிஞ்சம் வந்து சென்றுள்ளன. ஒரே வருடத்தில் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
விழிஞ்சம் துறைமுகத்தை நான்கு கட்டங்களாக கட்டி முடிக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்திற்கு ரூ.8867 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், கேரள அரசு 61.5 சதவீதமும், மத்திய அரசு 9.6 சதவீதமும், அதானி குழுமம் 28.9 சதவீதமும் முதலீடு செய்துள்ளன. கேரள அரசு மட்டும் முதல் கட்ட துறைமுக வளர்ச்சிக்காக ரூ.4500 கோடி செலவு செய்துள்ளது. இனி வரும் Phase 2, phase 3, phase 4 திட்டங்களுக்கான முதலீடுகளை அதானி குழுமம் செய்யும். 2045-க்குள் அனைத்து விரிவாக்க திட்டங்களையும் முடிப்பதே நிறுவனத்தின் இலக்கு. இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் பெரிய சரக்கு கப்பல்கள், டேங்கர் கப்பல்கள் வந்து சரக்குகளை ஏற்றி இறக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 220 மில்லியன் டாலர் செலவை சேமிக்க முடியும்.
இதன் சிறப்பு என்னவென்றால், பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் பிரேக்வாட்டர் மிக ஆழமானது. 28 மீட்டர் ஆழம், தோராயமாக ஒன்பது மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமம். இயற்கை சீற்றங்களில் இருந்து துறைமுகத்தை பாதுகாக்கவும் கப்பல்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் கடல் ஆர்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் இருக்கவும் கடலுக்குள் 3 கிமீ தூரத்துக்குக்கு 28 மீட்டர் ஆழத்தை நிரப்பும் வகையில் அக்ரோபாட்ஸ் கற்களுடன் கூடிய வாட்டர் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் பிரமாண்ட அலைதாங்கி தடுப்பணை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் 1500 கோடி ரூபாய் மதிப்புடைய பல லட்சம் டன் கற்கள் கடலுக்குள் கொட்டப்பட்டுள்ளன.
சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்சம் இருக்கிறது. இது ஐரோப்பா, பாரசீக வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கிறது. பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் இது உதவும். இதனால், வரும் வருடங்களில் கடல் வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும்.
இந்த துறைமுகம், சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன தானியங்கி கப்பல்-ஷோர் கிரேன்கள், தானியங்கி யார்டு கிரேன்கள் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக இயங்கும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை கொண்டுள்ளது. எனவே, சரக்குகளை வேகமாக கையாள முடியும். முதல் கட்டமாக ஆண்டுதோறும் 15 லட்சம் சரக்கு கன்டெய்னர்கள் கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த விரிவாக்க பணிகள் முடியும் போது, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். தோராயமாக, ஆண்டுதோறும் சரக்கு கன்டெய்னர்கள் கையாளும் எண்ணிக்கை 15 லட்சத்தில் இருந்து 45 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரயில், சாலை நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு துறைமுகமாகவும் விழிஞ்சம் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை இந்த துறைமுகத்திலிருந்து 2 கி.மீ., தொலைவில் தான் இருக்கிறது. இது தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு சாலை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இருந்து 12 கி.மீ., தொலைவிற்கு உள்ளேயே ரயில் நிலையம் இருக்கிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து 16 கி.மீ., தொலைவில் இருப்பதால் சர்வதேச சரக்கு போக்குவரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக இது மாறும்.
ஆண்கள் மட்டுமே செய்து வந்த க்ரைன் ஆப்பரேட்டர் போன்ற கடினமான வேலைகளை விழிஞ்சத்தில் பெண்களே செய்கிறார்கள். 20 கிரேன் ஆபரேட்டர்களில் 9 பேர் பெண்கள். சென்னை IIT, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் கப்பல் போக்குவரத்தை மேலாண்மை செய்யும் அமைப்பை விழிஞ்சம் துறைமுகத்தில் பயன்படுத்துகிறது. இதன் மூலம், க்ரைன் ஆபரேட்டர்கள் ஏசி அறையில் இருந்தபடியே தானியங்கி முறையில் வேலை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டின் எல்லை அருகே விழிஞ்சம் துறைமுகம் இருப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை எளிதாக இந்த துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யலாம். இதற்கேற்ப தமிழக அரசு தற்போது தென்மாவட்டங்களில் உள்ள காலி நிலங்களில் தொழிற்பேட்டைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள் துறைமுக அதிகாரிகள்.