பலரது வாழ்க்கையில், அவரவர் வீடுகளில் நடக்கும் அன்றாட பிரச்சனைதான் படம். மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கிறார், ஆகாச வீரன். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் மனதளவில் திருமணக் கனவில் இருக்கிறார்கள்.
ஆனால், இரு குடும்பத்தினராலும் அதற்குச் சிக்கல் வருகிறது. அதையும் மீறி அரசியைத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார், ஆகாச வீரன். நன்றாகச் சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார்கள், மச்சான், நாத்தனாரால் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.
அது இருவருக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது. இந்த பிரிவிற்கு குடும்பத்தின் பலருக்கும் பொறுப்பாக இருக்கும் சூழலில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
விஜய் சேதுபதி நல்ல குடும்பஸ்தனாக படம் முழவதும் வந்து மனைவி நிதியா மேனனுடன் ஊடல் செய்கிறார். மனைவியிடம் கோபம் கொள்ள முடியாமலும், அம்மாவை சமாதனப்படுத்த முடியாமலும் தங்கையை கண்டிக்க முடியாமலும் தவிக்கும் பாத்திரம் அதை இலகுவாக செய்திருக்கிறார். ஆனால் அந்த காட்டுக்கத்தலை மட்டும் குறைத்திருக்கலாம். அதற்கு இயக்குனர் பாண்டிராஜ்தான் பொறுப்பு. ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு குடும்பத்தின் ரசிகர்கள் அதிகரிக்கலாம்.
நித்யா மேனன் சும்மாவே அடவு கட்டி ஆடுவார். இதில் கணவனோடு மல்லுக்கு நிற்கும் பாத்திரம் வேறு எல்லாவிதமான முகபாவனையும் காட்டி அசத்தியிருக்கிறார். இவர்களோடு மோதும் அம்மா, அத்தை என்று தீபா சங்கர் அமுக்குனி மாதிரி இருந்து கொண்டு மகனுக்கு தூபம் போடும் காட்சிகளில் நம்மையும் கடுப்பேற்றுகிறார். அட்டகாசம். சரவணன் அப்பாவி அப்பாவாக வந்து அடி வாங்குகிறார்.
நிதியாவின் அண்ணனாக வரும் சுரேஷ் தங்கை சொன்னதை தடாலடியாக செய்து முடித்து சிக்கலில் மாட்டுகிறார். படிக்காத கணவன் என்றாலும் சமாளிக்க முடியாமல் அவனது அன்புக்காக மட்டுமே ஏங்கும் படித்த நித்யா மேனன் பல இடங்களில் கலங்க வைக்கிறார். சேதுவும் சும்மா இல்லை. அவர் பங்கிற்கு வார்த்தைப் போர் செய்து அம்மாவை மடக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
பொதுவாக எல்லோர் வீடுகளிலும் கணவன் மனைவி சண்டைக்கு முக்கிய காரணமாக இருக்கும் சொந்தங்களை வில்லன்களாக சித்தரிக்கும் இடத்தைத்தவிர, மற்றபடி படம் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை பேசியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை திரையில் பார்க்கும் மன உணர்வுக்கு ஆளாவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகாமல் அதை பூதாகரமாக்கி தெருவுக்கு கொண்டு வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த படம் தங்களையே பார்க்கும் கண்ணாடியாக தெரியும்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு நன்றாக உதவி இருக்கிறது. கிராமத்துக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது எம் சுகுமாரின் கேமரா..