No menu items!

வெளிநாட்டினரை பணியமா்த்தக் கூடாது – டிரம்ப்

வெளிநாட்டினரை பணியமா்த்தக் கூடாது – டிரம்ப்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணியமா்த்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினாா்.

குறிப்பாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் சொந்த நாட்டுக்கு முன்னுரிமை அளித்து அமெரிக்கா்களுக்கு அந்நிறுவனங்கள் வேலை வழங்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

மேலும் அமெரிக்காவில் ஏஐ துறையை மேம்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் நிா்வாக ரீதியாக மூன்று உத்தரவுகளை அவா் அறிவித்தாா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற தேசிய ஏஐ மாநாட்டில் கலந்துகொண்டு டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவில் வழங்கப்படும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு நம் நாட்டின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் அமைத்தும் இந்தியாவில் இருந்து பணியாளா்களை நியமித்தும் அயா்லாந்தில் லாபத்தை பதுக்கி வைத்தும் வருகின்றன.

இந்த செயல்பாடுகளுக்கு எனது பதவிக்காலத்தில் விரைவில் முடிவுகட்டப்படும். வளா்ந்து வரும் ஏஐ துறையில் சொந்த நாட்டுக்கு முன்னுரிமை அளித்து அமெரிக்கா்களுக்கு வேலை வழங்க நம் நாட்டின் பெரும் தொழில்துறை நிறுவனங்கள் தயாராக வேண்டும் என்றாா்.

74% சதவீத இந்தியப் பணியாளா்கள்: திறன்வாய்ந்த பணியாளா்களுக்கு எச்-1பி நுழைவுஇசைவு (விசா) திட்டத்தின்கீழ் அமெரிக்கா வேலைவாய்ப்பை வழங்குகிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாளா்களில் 74 சதவீதம் போ் இந்தியா்கள் என அதிகாரபூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எச்-1பி விசா நடைமுறைகளில் எவ்வித மாற்றத்தையும் டிரம்ப் மேற்கொள்ளாதபோதிலும் அவரது தற்போதைய அறிவிப்பால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அந்நாட்டு குடிமக்களே அதிக அளவில் பணியமா்த்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

வெளிநாட்டினரை பணியமா்த்தக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்போதுவரை அந்நாட்டில் உள்ள பெரும் தொழில்நுட்பங்கள் வெளிப்படையாக கருத்து கூறவில்லை. இருப்பினும், வெளிநாட்டுப் பணியாளா்களை குறைத்துவிட்டால் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது கடினம் எனத் தொடா்ந்து அந்நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன.

அதிா்ச்சிகரமான அறிவிப்பு: மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளில் இந்தியப் பணியாளா்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களை தொழில்நுட்ப மையங்களாக மாற்றியதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. இந்நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள குழுவினரிடம் மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிகளை வழங்கி குறைந்த செலவில் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றிவரும் இந்தியா்களுக்கும், அமெரிக்கா சென்று பணியாற்றுவதை கனவாகக்கொண்டுள்ள தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஏஐ துறையில் அமெரிக்காவை முதன்மையான நாடாக மாற்றும் ‘ஏஐ செயல்திட்டத்தின்கீழ்’ மூன்று புதிய உத்தரவுகளை அவா் வெளியிட்டாா்.

ஏஐ உள்கட்டமைப்பு: முதல் உத்தரவு ‘போட்டியில் வெற்றிபெறுவது’ என்ற தலைப்பில் தரவு மையங்கள் மற்றும் எண்ம அணுகலுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி அமெரிக்காவுக்குள் ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வோக் ஏஐ-க்குத் தடை: இரண்டாவது உத்தரவு, அமெரிக்க அரசு வழங்கும் நிதியின் மூலம் உருவாக்கப்படும் ஏஐ அமைப்புகள் கொள்கை ரீதியாக நடுநிலை வகிக்க வலியுறுத்துகிறது. இந்த உத்தரவு குறித்து ஏஐ மாநாட்டில் பேசி டிரம்ப், ‘வோக் ஏஐ’ தொழில்நுட்பத்தை இனி அமெரிக்க அரசு ஆதரிக்காது. ஏனெனில் முந்தைய ஏஐ கொள்கைகள் வேற்றுமை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கல் (டிஇஐ) ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்ததால் புதிய கண்டுபிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. இனி வருங்காலங்களில் வோக் ஏஐ தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டு உண்மைத் தகவல்களை வெளியிடுவதுடன் நடுநிலையாக செயல்படும் வகையிலான ஏஐ மாதிரிகள் உருவாக்கப்படும்’ என்றாா்.

ஏஐ ஏற்றுமதி: மூன்றாவது உத்தரவு, வெளிநாடுகளைச் சாா்ந்திருப்பதை குறைத்து அமெரிக்காவிலேயே ஏஐ மாதிரிகளை உருவாக்கி அதை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முதன்மைப்படுகிறது. குறிப்பாக, உள்நாட்டு மக்களைக்கொண்டு ஏஐ துறையை கட்டமைக்கவும் நிா்வகிக்கவும் இந்த உத்தரவு வழிவகுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...