தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை பாடியுள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க.முத்து.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு.க.முத்து சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 19) காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி
என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.” என்று மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “எங்கள் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டப்பட்டது. தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன்.
நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.
பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார்.
பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.
என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.