ஜென்-ஜி இளைஞர்களை கவரும் வகையில், சென்னையை சூப்பர் சென்னையாக மாற்றும் பிரச்சார இயக்கத்தை கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்தார்.
சென்னையை சூப்பர் சென்னையாக விளம்பரப்படுத்தும் விதமாக, கிரடாய் சென்னை அமைப்பின் ஆதரவுடன், ‘சூப்பர்சென்னை’ என்ற பிரச்சார இயக்கம், சென்னை அண்ணாசாலையில் நேற்று தொடங்கப்பட்டது.
கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி இயக்கத்தை தொடங்கி வைத்து, www.superchennai.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ‘சூப்பர் சென்னை’ என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமல்ல. நமது நகரத்தின் அழகை கொண்டாடுவதற்கும், நகரத்தின் எதிர்காலத்துக்கான புதிய வழியை காண்பிக்கவும் உதவும் ஓர் இயக்கமாகும். சென்னை நகரம் நம் வாழ்வியலோடு இணைந்துள்ளது.
கலாச்சாரம், புதுமைகளால் நிறைந்திருக்கிறது. ‘சூப்பர் சென்னை’ இயக்கமானது சென்னை நகரத்தின் வளர்ச்சி யையும், வாழ்வியலையும் வெளியுலகத்துக்கு எடுத்துக்காட்டவும், நம் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளை கண்டறியவும் நமக்கு உதவும்.
இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.2.4 லட்சம். அதேநேரம், தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.3.2 லட்சமாகும். அடுத்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.28 லட்சத்தை தொட்டுவிடும். இதில், சென்னை முக்கிய பங்கு வகிக்கும். விரைவில் 5 மெட்ரோ ரயில் பாதைகளை சென்னை நகரம் பெறும் சூழலில், இந்தியாவில், டெல்லிக்கு அடுத்து பெரிய அளவிலான ரயில் போக்குவரத்தை சென்னை கொண்டிருக்கும்.
இதன்மூலம், இந்தியாவில் மற்ற நகரங்களை விட வாழ்வதற்கு தகுதியான நகரமாக சென்னை உருவெடுக்கும். அதற்கு இந்த பிரச்சார இயக்கம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சூப்பர் சென்னை இயக்கத்தின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித் டி.ரத்தோட் பேசுகையில், “உலகில் மிகவும் வாழத் தகுதியான 100 நகரங்களில் சென்னையும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
பிரபல நகரங்களான நியார்க், லண்டன், ஆம்ஸ்டெர்டாம் உள்ளிட்டவைகளுக்கு ‘ஐ லவ்யு நியூயார்க்’, ‘விசிட் லண்டன்’ போன்ற பிரபல தளங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை போல, சென்னை நகருக்கு ‘சூப்பர் சென்னை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.