போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது விமானிகளை எதிஹாட் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியானதை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிஹாட் விமான நிறுவனம் தனது விமானிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், “போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், அந்த சுவிட்சுகளின் செயல்முறையை ஆய்வு செய்ய வேண்டும். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்டுகள் அருகில் உள்ள வேறு ஏதேனும் சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். கவனக்குறைவாக இயக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு பொருளும் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். முரண்பாடுகள் ஏதும் இருப்பது கவனிக்கப்பட்டால் அது குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம், சில விநாடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில், 15 பக்க முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) கடந்த 12-ம் தேதி வெளியிட்டது. அதில், “அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 ரக விமானம், ஓடுபாதையில் இருந்து மணிக்கு 283 கி.மீ வேகத்தில் மேலெழும்பியது. வானில் 3 விநாடிகள் வரை பறந்து 333 கி.மீ வேகத்தை எட்டியதும், விமானத்தின் என்-1, என்-2 ஆகிய இரு இன்ஜின்களின் எரிபொருள் சுவிட்ச்கள், ஒரு விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து செயலிழந்து ‘ஆஃப்’ ஆனதால், இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் செல்லவில்லை.
எரிபொருள் சப்ளை திடீரென நின்றுபோனதால், இன்ஜினுக்குள் சுழலும் விசிறியின் வேகம் குறைந்தது. இதனால், உந்து சக்தி கிடைக்காததை உணர்ந்த ஒரு விமானி, அனைத்து சுவிட்ச்களும் சரியாக உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது எரிபொருள் சுவிட்ச்‘ஆஃப்’ ஆகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மற்றொரு விமானியிடம், ‘எரிபொருள் சுவிட்ச்களை ஏன் ‘ஆஃப்’ செய்தீர்கள்?’’ என்று கேட்கிறார். ‘‘நான் ஆஃப் செய்யவில்லை’’ என்று அவர் அதிர்ச்சியுடன் கூறுகிறார்.
இந்த நிலையில், சுவிட்ச் ஆஃப் ஆன 10 விநாடிகளுக்கு பிறகு, விமானத்தின் முதல் எரிபொருள் இன்ஜின் மீண்டும் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. அடுத்த 4-வது விநாடியில் 2-வது இன்ஜினின் எரிபொருள் சுவிட்ச் ‘ஆன்’ செய்யப்பட்டது. இதனால் விமானத்தின் முதல் இன்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கியது. 2-வது இன்ஜின் இயங்குவதற்குள், 213.4 டன் எடை மற்றும் 54,200 கிலோ எரிபொருளின் எடையுடன் விமானம் மீண்டும் வானில் எழும்புவதற்கு தேவையான உந்து சக்தி கிடைக்காமல் கீழே இறங்கியது.