No menu items!

புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்

புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்

நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட நியாயவிலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவோ, ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது விளம்பரத்திற்காக உதவுமே தவிர மக்களுக்கு முழுமையான பயனை தராது.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 236-வது வாக்குறுதியான பல துறைகளின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும், 239வது வாக்குறுதியான மானிய விலையில் மூன்று LED பல்புகள் விநியோகம் செய்யப்படும், 240 வது வாக்குறுதியான சர்க்கரையின் அளவு உயர்த்தப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் போன்றவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தற்போது வீடுவீடாக ரேசன் பொருட்கள் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் தலைப்பில் ஊர் ஊராக பெட்டி வைத்து பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், தற்போது அடுத்த தேர்தலை மையமாக வைத்து ”உங்களுடன் ஸ்டாலின்” எனும் பெயரில் பெறப்படும் மனுக்களுக்கு மட்டும் எப்படி தீர்வு கிடைக்கும் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, இனியும் நாள்தோறும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதையும், அதற்கென பலகோடி ரூபாய் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதையும் நிறுத்திவிட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...