No menu items!

கேரள நிபா வைரஸ் எதிரொலி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கேரள நிபா வைரஸ் எதிரொலி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்த நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கை காணப்பட்டது. தற்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடுமையான காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால் அனைத்து மருத்துவர்களும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாகப் பழம் தின்னி வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகிறது. இதன் பாதிப்பு மூளைக்காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்தும், கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழத்தல், மனக் குழப்பம், கோமா மற்றும் மரணம் ஏற்படலாம்.

தொற்று ஏற்பட்ட ஐந்து முதல் 15 நாள்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். அது தென்பட்ட 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை சுய நினைவு இழத்தல், மனக்குழப்பம் ஏற்படலாம், பாதிப்பைக் கண்டறிய காய்ச்சல் மற்றும் மூளை அலர்ஜி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும், ரத்தம் மாதிரிகளை பரிசோதித்தும் கண்டு அறியலாம்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் நன்றாகத் தண்ணீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும், விலங்குகள் கடித்ததைச் சாப்பிடக் கூடாது. பன்றிகளைக் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...