ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. ஜூலை 25-ம் தேதிக்குள் திருத்தப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிய நடைமுறையின்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உட்பட 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இந்த வழக்கில் நேற்று விசாரணை தொடங்கியது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயண், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் துவிவேதி, மணீந்தர் சிங் ஆகியோரும் ஆஜராகினர்.
இருதரப்பினரும் சுமார் 3 மணி நேரம் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதன்பிறகு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய் மல்யா பாக்சி கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள அரசியலமைப்பு சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்வது ஏன்? முன்கூட்டியே திருத்தப் பணியை மேற்கொண்டு இருக்கலாமே?
தற்போது எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை ஜூலை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.