ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுடன் நீதிமன்றம் மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உயர் ரக போதை பொருட்களின் புழக்கமும் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் நடைபெற்ற மோத தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் போதை பொருள் மாஃபியாவாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. பிரசாத் எங்கிருந்து போதை பொருட்கள் வாங்குகிறார், அவர் அதை யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறார் என்று காவல்துறை விசாரணை நடத்தியது.
அப்போது சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பிரசாத் போதை பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடிகர் ஶ்ரீகாந்தை கைது செய்தனர். தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். பிரசாத்திடம் அவர்கள் கொகைன் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது,
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்ற காவலில் இருந்த நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் காவல்துறை கஸ்டடி எடுத்தும் விசாரணை நடத்தியது. இதனிடையே அவர்கள் இரண்டு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கு காவல்துறை கடும் ஆட்சேபனை தெரிவிக்கவே, சிறப்பு நீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஶ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வாதம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.