நேற்று நடைபெற்ற அஜித்குமாரின் விசாரணையில் போலீசாரையும் தமிழக அரசையும் நோக்கி நீதிபதிகள் அதிரடியாக கேள்விகளை எழுப்பினர்.
நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
காவல்துறை விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாரின் வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமைப்பில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏராளமான வழக்கறிஞர்கள் அரசு தரப்புக்கு எதிராக வழக்காடினர்.
இந்நிலையில் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது என்ன நடந்தது என்பது குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் விளக்கியுள்ளார். அப்போது பேசிய அவர்,” கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள், பல இயக்கங்கள், பல வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு எல்லோரும் மனு தாக்கல் செய்தோம்.
விசாரணையின் போது, நீதியரசர் அவர்கள் 27ஆம் தேதி நடந்த சம்பவம் அந்த அம்மையார் உடைய நகை காணாமல் போனது. அவர்கள் அஜித்தை சந்தேகப்பட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாருக்கு 27ஆம் தேதி ரசீது மட்டும் கொடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. 28ஆம் தேதி காலை 10:30 மணிக்குத் தான் நகை காணாமல் போனது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆகவே எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பே மானாமதுரை டி.எஸ்.பி அவர்கள் தலைமையில், சிறப்பு குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு குழு அஜித்தையும் பின்னர் இரவில் அருணையும் மற்றவர்களையும் அவர்களது தம்பி நவீன் ஆகியோரை காவலில் இரவு முழுவதும் 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி விடியற்காலை நாள் முழுவதும் திருப்புவனத்தை சுற்றி இருக்கக்கூடிய நான்கு பகுதிகளுக்கு கூட்டிச் சென்று மிகக் கொடூரமாக சித்தரவதை நடத்தினார்கள் என்பதை நீதிபதி கேட்டு ஆவேசப்பட்டு, வருத்தப்பட்டு தன்னுடைய ஆணையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இறுதியாக மடப்புரம் கோவில் பின்பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை அழைத்துச் சென்று,” நீங்கள் எடுத்து வைத்திருக்க 10 சவரன் நகைகளை எங்கே?” என்று கேட்டு அங்கே இருக்கக்கூடிய பொருட்களை புரட்டிப் பார்த்துள்ளனர். அங்கே எதுவும் இல்லை கிடைக்கவில்லை என்று அவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அவரது கண்களிலும் வாயிலும் மிளகாய் பொடியை போட்டு இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு இருக்கிறோம்.
அதை நேரடியாக பார்த்து கோவில் அருகே பணியாற்றக்கூடிய சத்தீஸ்வரன் என்கின்ற இளைஞர் கழிவரையிலிருந்து ஒரு 15 முதல் 30 வினாடிகளுக்குள் இருக்கக்கூடிய வீடியோவை பொறுப்புடன் வழக்கறிஞர்களிடம் கொடுத்து நீதிமன்றத்தில் இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நீதிமன்றம் அங்கே நடந்த சம்பவத்தை பார்க்க முடிந்தது. இது போக அங்கு இருக்கக்கூடிய அதாவது சம்பவம் நடந்த இடத்தில் இருக்கக்கூடிய கம்புகள் உள்ளிட்டவைகள் புகைப்படமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அரசின் தரப்பில் அவர்கள் தெரிவித்தது காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராவை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் கோவிலில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்கப்பட வேண்டும் என்கின்ற காரணத்தினால் 29ஆம் தேதி காலையில் ராமச்சந்திரன் என்கின்ற சார்பு ஆய்வாளர் அங்கே நேரில் சென்று எந்த ஒரு விளக்கமும் எழுத்துப்பூர்வ அறிக்கையும் கொடுக்காமல் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்த ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றுள்ளார் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதை நாங்களும் கூறியிருக்கின்றோம். அதன் பிறகு நீதியரசர் அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு பிரேத பரிசோதனை சான்றிதழ் டீன் கொண்டுவரவில்லை என்கின்ற புகாரின் காரணத்தினால், அவரை வரவழைத்து அவரிடம் இருந்து முதற்கட்ட பிரேத பரிசோதனை(sealed cover) அறிக்கையை வாங்கி அதில் 44 கொடூர காயங்கள் இருக்கின்றது என்பதை குறிப்பிட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு காயங்கள் இருக்கின்றதா? என்பதை நீதியரசர் குறிப்பிட்டார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்
இறுதியில் நீதிமன்றத்துடைய ஆணை என்னவென்றால் மதுரை நான்காவது கூடுதல் செசன்ஸ் ஜான் சுந்தர்லால் சுரேஷ் அவரை ( என்கொயரி ஆபிஸர் )விசாரணை அலுவலராக நியமனம் செய்து அவரிடம் அனைத்து சாட்சியங்கள் மற்றும் பொருட்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அவர் ஆய்வு செய்து எட்டாம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு தன்னுடைய அறிக்கையை முழுமையாக அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணையை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை தொடரும் என்று கூறி அதே தேதிக்கு முன் அவர்கள் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். சாட்சிகளை யாரும் மிரட்டக்கூடாது அவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்யக் கூடாது என்பதை கூறி அரசு இன்னும் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்