குளிர்சாதனங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அளவை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற புதிய கட்டுப்பாடு கொண்டு வர முடிவு செய்திருப்பதாக தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
வீடு, அலுவலகங்கள் , வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்களில்(ஏசி) குறைந்தபட்ச வெப்பநிலை தரநிலை அளவை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற புதிய கட்டுப்பாடு விரைவில் கொண்டுவர இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் குளிர்சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். வீடு, வணிக வளாகங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் குளிர்சாதனங்களில் குறைந்தபட்சம் 16 டிகிரி செல்சியல் முதல் அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.
குளிர்சாதனங்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலை, சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக குளிர்சாதனங்களில் மாற்றம் செய்ய முடியாது.
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்களுக்கு மட்டுமின்றி கார்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்களுக்கும் இது பொருந்தும்.
பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இனிமேல் அறிமுகப்படுத்தப்படும் குளிர்சாதனங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் கீழ் இருக்காது. அதேபோன்று அதிகபட்ச வெப்பநிலையும் 28 டிகிரி செல்சியல் மேல் அதிகரிக்க முடியாது. சோதனை அடிப்படையில் இது கொண்டு வரப்பட இருப்பதாகவும் விரைவில் அமலுக்கு வரும் எனவும் கட்டார் கூறினார்.
இதனிடையே, நாம் பயன்படுத்தும் குளிர்சாதனங்களின் வெப்பநிலையை வெறும் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதன் மூலம் நாம் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தில் சுமார் 6 சதவீதத்தை சேமிக்க முடியும் என்று எரிசக்தி திறன் பணியகம் தெரிவித்துள்ளது.
பயனாளிகள் பலர் தங்கள் குளிர்சாதனங்களை 20-21 டிகிரி செல்சியஸில் வைத்திருப்பதாகவும், ஆனால் சிறந்த வெப்ப தரநிலையான 24-25 டிகிரி செல்சியஸுக்கு இடையில் வைத்திருப்பதுதான் உண்மை. குளிர்சாதனங்களை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் தரநிலையில் வைத்திருப்பன் மூலம், மின் பயன்பாட்டில் சுமார் 24 சதவீதத்தை சேமிக்கலாம்.
குளிர்சாதனங்களை 24 டிகிரி செல்சியஸில் வைத்திருப்பதன் மூலம், மின் பயன்பாட்டை சேமிப்பது மட்டுமல்லாமல் செலவுகளையும் குறைக்கலாம். பயனாளர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றினால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பில்லியன் யூனிட் மின்சாரத்தை கூட்டாகச் சேமிக்க முடியும், இது சுமார் ரூ.10,000 கோடி மதிப்புடையது என்று எரிசக்தி திறன் பணியகம் கூறுகிறது.