பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஒருமுறைக் கூட குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜயை திமுக பிரமுகர் வைஷ்ணவி கடுமையாக சாடியுள்ளார். தவெகவின் கொள்கை எதிரியின் பெயரை குறிப்பிடுவதில் தயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள வைஷ்ணவி, இது மக்களை ஏமாற்றும் பி ஸ்கிரீன் அரசியல் என்றும் சாடியிருக்கிறார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து கோவை மாவட்ட நிர்வாகியான வைஷ்ணவி விலகுவதாக அறிவித்தார். இதன்பின் வைஷ்ணவி திமுகவில் இணைந்த நிலையில், தவெக இன்னொரு பாஜக என்று விமர்சித்து அதிர்ச்சியை கொடுத்தார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்-ன் அறிக்கையில், இரட்டை நிலைப்பாடு இருப்பதாக விமர்சித்திருக்கிறார்.
வைஷ்ணவி கேள்வி
இதுதொடர்பாக திமுகவில் இணைந்த வைஷ்ணவி தனது எக்ஸ் பக்கத்தில், இத்தனை முறை தமிழக முதல்வர் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கும் விஜய், ஏன் ஒருமுறைக் கூட பிரதமர் மோடி அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை? அரசியல் எதிரியின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு உங்கள் கொள்கை எதிரியின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தயக்கம்?
தவெக – பாஜக
வருங்காலத்தில் பாஜக-வுடன் நீங்கள் கூட்டணி வைப்பதில் சந்தேகம் இல்லை என்பது உங்கள் அறிக்கையிலேயே தெளிவாகத் தெரிகிறது. முன்னாலே த.வெ.க, பின்னாலே பா.ஜ.க. இது மக்களை ஏமாற்றும் பி-ஸ்கிரீன் அரசியல் என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் பிரமதர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
விஜய் சொன்னது என்ன?
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், குடும்ப சுயநலத்திற்காக தமிழக மானத்தை அடகுவைத்து,மத்திய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த திமுக தலைமை என்று விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக – பாஜக இடையே பழைய கூட்டணி புதுப்பிட்டப்பட்ட போதே, திமுக – பாஜக உள்ள மறைமுக கூட்டணி பற்றி கூறி இருந்தோம்.
காலை சுற்றும் பாம்பு
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமலாக்கத்துறை நடவடிக்கை காலை சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.1,000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டதால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த முறை, நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாக வைத்து டெல்லி சென்று, பிரதமரை தனியாக சந்தித்ததாகவும் விமர்சித்துள்ளார்.
பெயரை குறிப்பிடாதது ஏன்?
தவெக தலைவர் விஜய் அறிக்கையில் பிரதமர் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தாலும், நரேந்திர மோடி என்ற பெயர் ஒரு இடத்தை கூட இடம்பெறவில்லை. இதுகுறித்தே திமுக பிரமுகர் வைஷ்ணவி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதேபோல் சில வாரங்களுக்கு முன் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த போதும் கூட, அதனை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவின் பெயர் ஒரேயொரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார்.