அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் , சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இது புயல் சின்னமாக மாறாமல், இன்றே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும், ரத்தினகிரிக்கு டபோலிக்கும் இடையே தாழ்வு மண்டலம் கரையை கடக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரளத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.