யோகிபாபுவின் தந்தை மிகப்பெரிய மேஜிக் நிபுணராக இருக்கிறார். அவரிடம் சின்னச்சின்ன மேஜிக் கற்றுக்கொண்டு வரும் நிலையில், ஒரு பெரிய ரிஸ்கான மேஜிக் செய்யும் போது அப்பா இறந்து போகிறார்.
இதனால் அதிர்ச்சி அடையும் யோகிபாபு, அப்பாவின் ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார். அவருக்கு சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.
இந்த நிலையில் அதே ஊரில் வசிக்கும் சிலர் ஒரு ஏழை சிறுமியை கற்பழித்து கொலை செய்கிறார்கள். அவர்களை பழி வாங்க முடிவு செய்கிறார் யோகிபாபு அதற்கு தனது மேஜிக் வித்தையை பயன்படுத்துகிறார். அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதை படம் சொல்கிறது.
யோகிபாபு கால்சீட் கிடைத்தாலே படம் வெற்றிபடமாக அமைந்து விடும் என்று இயக்குனர் வினீஷ் மில்லெனியத்திடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதை வாங்கிக் கொண்டு யோகிபாபுவை அந்தப்பக்கம் இந்தப்படம் நடக்க வைத்து படத்தை நகர்த்துகிறார். யோகி பாபுக்கும் கதையை சரியாக சொல்லியிருக்க மாட்டார் என்றே தெரிகிறது.
இயக்குனர் சொன்னதை செய்து விட்டு படம் முழுவதும் அமைதியாக இருந்து விடுகிறார் யோகி. திரைக்கதையில் எந்த சுவாரஸயமும் இல்லாததால் படம் ஆமை வேகத்தில் நகர்கிறது.
சில இடங்களில் மட்டும் யோகிபாபு ரசிக்க வைக்கிறார். நாயகியாக சாந்தி ராவ் வருகிறார். அவ்வளவே.
வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிக்க, யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பெராடி, கல்கி, வசந்தி, அருவி பாலா நடிப்பில் கதை திரைக்கதை வசனத்தை கே . பிரகாஷுடன் இணைந்து எழுதி, வினீஷ் மில்லெனியம் எழுதியிருக்கிறார்.
முழுக்க முழுக்க யோகிபாபுவை நம்பியே படம் நகர்கிறது. கதையில் அழுத்தமில்லாமல் இருப்பதால் காட்சிகள் ஏனோ தானோவென்று படமாக்கப்பட்டுள்ளன. க்ளைமேக்ஸ் காட்சிகள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன.
க்ரைம், மேஜிக், பழி வாங்குதல் என்று பல வாய்ப்புக்கள் இருந்தும் எதையும் சரியாக பயன்படுத்தாமல் போனதுதான் சோகம்.