சென்னையில் எரிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் சடலங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரே மாதிரியான தன்மையோடு கொலை நடந்திருப்பதால் பரபரப்பாகிறது போலீஸ். இந்தக் கொலையை கண்டுபிடிக்க அரவிந்தன் என்ற ஐபிஎஸ் அதிகாரியை நியக்கிறார் கமிஷனர்.
கொலையாளியை தேடிப்போகும் அரவிந்தனுக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது. இதனை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி விபத்தில் சிக்கியதும், கொலைக்குப் பின்னால் இருக்கும் துயர சம்பவங்களும் மனதைத் தொடுகிறது. கொலையாளி யார் ? கொலைக்கான காரணம் என்ன ? என்பதை திகிலுடன் விளக்கியிருக்கிறார் புதிய இயக்குனர் லோகேஷ் அஜிஷ்.
மிடுக்கான காவல் அதிகாரியாக நவீன் சந்திரா படம் முழுவதும் கமீரமாக வருகிறார். அவரது முகக்குறிப்பும், நடிப்பும் பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்திப் போகிறது. அவரை வைத்து அடுத்தடுத்த கட்ட திருப்பங்களை கதையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இதனால் விறுவிறுப்பாக நகர்கிறது. நாயகியாக ரேயாஹரி மிகையாக தெரிகிறார். ரித்விகா இரட்டை வேடத்தில் அழகாக வந்து கதைக்கு கைக்கொடுக்கிறார்.
அபிராமி, ஆடுகளம் நரேன், அர்ஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை மிக அழகாக செய்து முடித்திருக்கின்றனர் வித்தியாசமான கதை, திரைக்கதை இயக்கத்தில் படம் வேகமாக நகர்கிறது.
இமானின் இசையும் படத்திற்கு திரில்லை கொடுக்கிறது. பிளாஷ் பேக் காட்சிகளாக வரும் கதை மனதை கரைக்கிறது. அதன் பின்னால் இருக்கும் சோகமும், க்ளைமேக்ஸ் காட்சியும் அதிர்ச்சிகரமான இடங்கள்.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு தூண் என்றே கூறலாம். ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு சுபேந்தரின் கலை வடிவம் என படத்திற்கு பல ப்ளஸ் பாயிண்டுகள். ஆனாலும் பல திரில் படங்களில் பார்த்த மாஸ்க் கொலைகாரன். திரைக்கதைக்காக செய்து கொண்ட சமரசங்கள் என்று பல பலவீனங்கள் இருக்கிறது.