ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில் ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது.ஆர்த்தி ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் விவரம்: “ஓராண்டாக நான் அமைதிக் கவசம் பூண்டிருந்தேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல; என் மகன்களுக்கு என்னைவிட அதிகமான அளவில் அமைதி தேவைப்பட்டது என்பதால்தான்
என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும், அத்தனை வசைபாடுதல்களையும், எனை நோக்கி முணுமுணுக்கப்பட்ட கடுஞ்சொற்களையும் கூட உள்வாங்கிக் கொண்டிருந்தேன். என் மேல் உண்மை இல்லை என்பதற்காக அல்ல; என் குழந்தைகளுக்கு பெற்றோர்களில் யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காக!
இன்று, இந்த உலகம் கவனமாக தொகுக்கப்பட்ட தோற்றங்களை, புகைப்படத் தலைப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மை நிலை வேறாக இருக்கிறது. எனது விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் யாரது அருகில் காதலுடன், நம்பிக்கையுடன், உண்மையுடன் நின்றேனோ, அவர் என்னைவிட்டு விலகிச் சென்றுள்ளார். என்னை மட்டும் விட்டு விலகிச் செல்லவில்லை, எனக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் துறந்து சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக என் தோள்கள் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் தனியே சுமந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு வேளை உணவும், ஒவ்வொரு இரவின் கண்ணீரும் நானே சுமப்பதுவும், சுகமடைவதுமாக சென்றது. ஒரு காலத்தில் அவரின் பெருமித அடையாளமாக என்னைக் கண்டவர்களிடம் இருந்து இதுவரை ஒரு துளியளவேனும் ஆறுதலோ, நிதி உதவியோ வரவில்லை. மாறாக, இன்று நான் வாழும் வீட்டைவிட்டு வெளியேறும்படி வங்கி உத்தரவு வருகிறது. அதுவும், அந்த வீட்டை என்னுடன் சேர்ந்து பார்த்துப் பார்த்து கட்டியெழுப்பியவரின் உத்தரவின் பேரில் வருகிறது.
நான் தங்கத்தின் பின்னால் ஓடியதாக குற்றச்சாட்டு வேறு. அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால், நான் எனது தனிப்பட்ட விருப்பங்களை எப்போதோ நிறைவேற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், நான் கணக்கு வழக்குகளை விடுத்து காதலை தேர்வு செய்தேன். பணப் பரிவர்த்தனைகளுக்குப் பதில் நம்பிக்கையை தேர்வு செய்தேன். அவை என்னை இன்று இந்த நிலைக்கு இட்டுவந்துள்ளன. நான் காதலைக் குறைகூறவில்லை. ஆனால், அந்தக் காதல் பலவீனமானதாக மாற்றப்படும்போது, நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
எனது குழந்தைகளுக்கு முறையே 10, 14 வயதாகிறது. அவர்களுக்கு பாதுகாப்பே தேவை, அதிர்ச்சி அல்ல. ஸ்திரத்தன்மையே தேவை, மவுனம் அல்ல. சட்டப் பிரிவுகளைப் புரிந்து கொள்ளும் வயதில்லை. ஆனால், புறக்கணிப்பைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இருக்கிறது. பதில் சொல்லப்படாத அழைப்புகள், புறக்கணிக்கப்பட்ட சந்திப்புகள், அவர்களால் வாசிக்கப்பட்ட எனக்கான கடும் குறுந்தகவல்கள் எல்லாமே அவர்கள் வெறுமனே பார்த்துக் கடப்பவை அல்ல உள்ளே ஏற்பட்ட காயம்.
இன்று நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை; ஒரு பாதிக்கப்பட்டப் பெண்ணாகவும் பேசவில்லை. நான் தனது குழந்தைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது எழவில்லை என்றால் எப்போதும் தோற்றவளாகிவிடுவேன்.
நீங்கள் தங்க வஸ்திரங்களில் உலா வரலாம். நீங்கள் உங்கள் பொது வாழ்க்கையில் உங்களுக்கான பொறுப்புகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது.
தந்தை என்பது வெறும் தலைப்பு அல்ல. அது ஒரு பொறுப்பு. நமது வாழ்க்கையைப் பற்றிக் கதைத்துச் செல்பவர்களின் கண்களில் நம் குழந்தைகளின் கண்ணீரை உங்களால் காண முடியாது. நீங்கள் எனது வார்த்தைகளைக் கடந்து செல்லலாம், ஆனால் இந்த உலகம் உங்களைப் பற்றி மவுனமாக என்ன நினைக்கும் என்பதைக் கடக்க இயலாது.
நானும், படைத்தவனும் வேறுவிதமான முடிவை எடுக்கும் வரை எனது இன்ஸ்டாகிராமில் என் பெயர் ஆர்த்தி ரவி என்றே இருக்குமென்பதை இங்கே குறுகுறுத்துக் கொண்டிருக்கும் மனங்களுக்கும், என் ஒருசில நலன் விரும்பிகளுக்கும் தெரி
மதிப்புக்குறிய ஊடகங்களே, என்னை ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி என்றழைப்பதை சட்டம் அதற்கான வாய்ப்பை முடிவும் செய்யும் வரை தவிர்த்துவிடுங்கள். அதுவரை அமைதியைப் போல் பொறுமையும் ஓர் அறம்.
இது பழிவாங்குதல் அல்ல. இது பொழுதுபோக்கும் அல்ல. இது ஒரு தாயின் வேள்வி. போராட்டத்துக்கானது அல்ல பாதுகாப்பதற்கான வேள்வி.
நான் அழவும் இல்லை. நான் கூப்பாடு போடவும் இல்லை. எல்லாவற்றிலும் இருந்து உயர்ந்து நிற்கிறேன். ஏனெனில் அப்படித்தான் நான் இப்போது இருக்க வேண்டும்… உங்களை இன்னும் அப்பா என்றழைத்துக் கொண்டும் இரு மகன்களுக்காக. அவர்களுக்காக நான் எப்போதும் பின்வாங்க மாட்டேன்”