சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: * பிரதமர் மோடி: பொதுத் தேர்தலில் லாரன்ஸ் வோங் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவும், சிங்கப்பூரும் மக்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளுடன், வலுவான பன்முக ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஒத்துழைப்பு, நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்காக உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
முதல்வர் ஸ்டாலின்: மக்கள் செயல் கட்சியை, அதன் 14-வது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச் சென்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு எனது வாழ்த்துகள். தலைவராக சந்தித்த முதல் தேர்தலில் இத்தகைய பெரு வெற்றியை சிங்கப்பூர் மக்களிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். தமிழ் மக்களுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி, தமிழ் மொழியையும், பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கும் அவரது முயற்சிகள், அனைவரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்.