வரி காரணமாக சீனா-அமெரிக்கா வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான விஷயங்களை பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம் என சீனா கூறியிருக்கிறது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்றும், இனி வரும் நாட்களில் உலக வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை எழுந்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சீன தயாரிப்பு பொருட்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்காவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு சீனாவின் வர்த்தகம் வளர்ந்து வருகிறது. இதனால் டென்ஷனான அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘அமெரிக்கா முதல்’ எனும் கொள்கையை அமல்படுத்தினார். இதன் மூலம் சீனாவை விஞ்சி விட முடியும் என்றும் நம்பினார். இதற்காக மற்ற நாடுகள் மீது வரிகள் விதிக்கப்பட்டன.
அதிகபட்சமாக சீனா மீது 245% வரை வரியை போட்டார். மற்ற நாடுகள் மீது போடப்பட்ட வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டபோதும், சீனா மீதான வரி நிறுத்தப்படவில்லை. சீனா மீதான வரி சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. உலக பொருளாதார வளர்ச்சியே குறைந்தது. எனவே எப்போடா இந்த வரி பஞ்சாயத்து முடிவுக்கு வரும்? என இந்தியா உட்பட பல நாடுகள் எதிர்பார்த்து காத்திருந்தன.
இப்படி இருக்கையில்தான் வரி போர் பற்றிய பாசிட்டிவான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சீனாவின் வர்த்தக அமைச்சகம் கூறுகையில், “இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் பற்றி அமெரிக்கா சமீபத்தில் பல வழிகளில் எங்களிடம் பேச முயன்று வருகிறது. இதனை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் வரி காரணமாக சீனா கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. ஏற்றுமதி சரிந்திருப்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. வால்மார்ட், டார்கெட் போன்ற அமெரிக்க பெருநிறுவனங்கள் சீனாவை தொடர்பு கொண்டு வருகிறது. இருப்பினும் மீதமுள்ள நிறுவனங்கள் ஐரோப்பா பக்கம் கடையை விரிக்க தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவுக்கு செல்லும் சீனாவின் பொருட்கள் இந்த ஏப்ரல் வரை ஏறத்தாழ 70-80% குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக சீனா வாயை திறந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சீனாவுடன் வர்த்தகம் குறித்து ஏற்கெனவே டிரம்ப் பேசியிருந்தார். அதாவது, “சீனாவுடன் பேசி வருகிறேன். வரியை குறைக்கும் ஐடியா இருக்கிறது” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சீனா, “அமெரிக்கா முதலில் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். யதார்த்தத்திற்கு கொஞ்சமும் பொருந்தாத வரியை நீக்க வேண்டும். அப்போதுதான் பேசுவோம்” என்று கூறியிருந்தது.