கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கிறது. இதுவரை, இந்தியாவின் 75 சதவீத டிரான்ஷிப்மென்ட் நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன, இதன் விளைவாக நாட்டுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்பட்டது.” என தெரிவித்தார்.
‘குஜராத் மக்களின் கோபத்தை..’ மேலும் அவர், “நான் இப்போதுதான் துறைமுகத்தைப் பார்வையிட்டேன். ஆனால் குஜராத் மக்கள் கவுதம் அதானி கேரளாவில் இவ்வளவு பெரிய துறைமுகத்தைக் கட்டியுள்ளார் என்பதை அறிந்ததும் குஜராத்தில், அவர் 30 ஆண்டுகளாக துறைமுகங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால் இதுபோன்ற துறைமுகத்தை அவர் ஒருபோதும் கட்டியதில்லை. எனவே அவர் குஜராத் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.” என்று நகைச்சுவையாகக் கூறினார். இது பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பை வரவழைத்தது.
முன்னதாக, துறைமுகத்தின் போக்குவரத்து மையத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். வெற்றிகரமான சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து, துறைமுகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அதன் வணிக ரீதியான செயல்பாட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளது. சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் நாட்டின் இணைப்பை மேலும் அதிகரிக்கும் வகையிலான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம், சரக்குகளை மாற்றுவதற்கு மற்ற சர்வதேச துறைமுகங்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.