சசிகுமார், அவர் மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் மற்றும் கமலேஷ் ஆகியோர், இலங்கை வல்வெட்டிதுறையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு அகதிகளாக வருகிறார்கள். போலீஸ்பிடியில் சிக்கினாலும் நல்ல போலீஸ் ரமேஷ்திலக் உதவியால் சென்னைக்கு பிழைப்பு தேடி செல்கிறார்கள். அங்கே ஒரு ஏரியாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டு மாடியில் வசிக்கிறார்கள். சசிகுமாருக்கு டிரைவர் வேலை கிடைக்கிறது. அந்த சமயத்தில் ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக, இலங்கை தமிழ் பேசும் சசிகுமார் குடும்பத்தை போலீஸ் அதிகாரி தேடுகிறார். சென்னைக்கு டீமுடன் வருகிறார். அந்த ஏரியாவாசிகள் என்ன செய்கிறார்கள். சசிகுமார் குடும்பம் பிடிபட்டதா? அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப பட்டார்களா? என்ன நடந்தது என்பதை சற்றே அழுத்தமான திரைக்தையுடன், காமெடி, எமோஷன் கலந்து சொல்லும் படம் டூரிஸ்ட் பேமிலி.
ராமேஸ்வரத்தில் அகதியாக ஒரு குடும்பம் வந்து இறங்குவதில் இருந்து கதை தொடங்குகிறது. சற்றே சீரியசான படமோ என்று நினைத்தால், சில நிமிடங்களில் காமெடி மட்டும் கலாட்டாக்களால் அந்த பிம்பத்தை உடைக்கிறார் புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். சென்னையில் வீடு தேடும் படலம். பக்கத்து வீட்டுகாரர்களின் அறிமுகம், அவர்களின் நட்பு, சசிகுமார் டிரைவர் வேலை தேடி அலைவது, டீன் ஏஜ் காதல், சிம்ரனின் வெகுளிதனம், இளையமகன் கமலேஷ் குறும்பு என முதற்பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. 2ம் பாகமும் கலகலப்புடன் தொடங்கினாலும், சசிகுமார் குடும்பத்தை போலீஸ் தேடுவது, விசாரணை என்று பரபரப்பாகவும் நகர்கிறது. கிளைமாக்ஸ் அன்பை, பாசத்தை, மனிதநேயத்தை மனதில் நிற்பது மாதிரி சொல்கிறது.
ஆரம்பம் முதல் கடைசிவரை, பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக, பாசக்கார தந்தையாக, நகைச்சுவை மிகுந்தவராக நடிப்பில் கலக்கி இருக்கிறார் சசிகுமார். இப்படிப்பட்ட கதையை, ஒரு புதுமுக இயக்குனரை நம்பி தேர்ந்தெடுத்தற்காக, இலங்கை அகதிகள் குறித்த இந்த கருவை சொல்ல ஆசைப்பட்டதற்காக அவரை பாராட்டலாம். சிம்ரனுக்கும் அவருக்குமான சீன்கள், மகன்களுக்கும், அவருக்குமான வசனங்கள் ரசிக்க வைக்கிறது. மேக்கப் இல்லாவிட்டாலும், 2 குழந்தைக்கு அம்மாவாக நடித்தாலும், நடிப்பால் அவ்வளவு அழகாக தெரிகிறார் சிம்ரன். மூத்த மகன் மிதுன் காதல் காட்சியிலும், இளையமகன் கமலேஷ் காமெடியிலும் கலக்கி இருக்கிறார்கள். பக்கத்து வீட்டுகாரர்களாக வரும் பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், குமாரவேல், ஸ்ரீஜாரவி ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். சிம்ரன் அண்ணனாக சில காட்சிகளில் வந்தாலும் யோகிபாபு கேரக்டர், அவர் வசனங்கள் கைதட்டலை அள்ளுகிறது. ஷான்ரோல் இசை, பாடல்களும், அரவிந்த் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். பல கேரக்டர் பின்னணி, மனித உணர்வுகளை, பாசத்தை வெளிப்படுத்துகிறது. இயக்குனரும் மறதியால் பாதிக்கப்பட்ட அம்மாவின் பாசத்துக்கு ஏங்குபவராக நடித்து இருக்கிறார்.
இலங்கை தமிழர்கள் குறித்து பல படங்கள் தமிழில் வந்து இருந்தாலும், டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு எந்த படமும் அவர்கள் சோகத்தை, ஏக்கத்தை வலுவாக, அதேசமயம் கமர்ஷியலாக சொன்னது இல்லை. குறிப்பாக, கிளைமாக்ஸ் அப்படியொரு உணர்வை உருக்கமாக சொல்கிறது, கண்ணீரை வரவழைக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும். இலங்கை அகதிகள் விஷயத்தில் நாம், அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை அழகாக அழுத்தமாக சொல்லி, தமிழ்சினிமாவில் முக்கியமான இயக்குனராக தன்னை பதிவு செய்து இருக்கிறார் அபிஷன் ஜீவிந்த்.