கஜேந்திரா இயக்க்தில் ரிஷிரித்விக், ஆராதியா, பருத்திவீரன் சரவணன், வினோதினி நடித்த படம் ‘குற்றம்தவிர். இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த பாண்டுரங்கன் தயாரித்துள்ளார். சென்னையில் நடந்த இந்த பட பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர், இயக்குனரான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அவர் வழக்கம்போல் அதிரடியாக பேசினார்.
அவர் பேசுகையில் ‘‘நான் பேச ஆரம்பித்தால் ஏதாவது சூடான செய்திகள் கிடைக்குமா என்று மீடியாவினர் எதிர்பார்க்கிறார்கள். நான் வாயை திறக்க கூடாது என நினைக்கிறேன். எங்கள் குடும்பமும், தேவா குடும்பமும் சம்பந்திகள். இந்த படத்தின் பாடல்கள் அருமையாக இ ருக்கிறது. ஆனாலும், குறை சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா பெயர் இல்லை. இசை வெளியீட்டுவிழாவில் இசையமைப்பாளர்தான் ஹீரோ. ஆகவே, இது தவறு. அவருக்காக நான் பேசுகிறேன். இதை செய்தவர்கள், அடுத்த நிகழ்ச்சியில் இந்த தவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். எங்கள் மரியாதையை நான் விட்டுக்கொடுக்கமாட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் 18 படங்கள் இயக்கினேன். இப்போது வீட்டில் சும்மா இருக்கிறேன். என் வாரிசுகளுக்கு சினிமாவை கொடுத்துவிட்டேன். அவர்கள் படங்கள் இயக்கும்போது அதை செய், இதை செய் என ஐடியா கொடுப்பது இல்லை. அவரவர் திறமை, அறிவினால் முன்னேற வேண்டும். பொதுவாக, இப்போதுள்ள படங்களில் சென்டிமென்ட் குறைவாக இருக்கிறது. அதை அதிகப்படுத்தலாம் என்பது என் கருத்து. கொஞ்சம் காமெடியையும் அதிகம் சேர்க்கலாம். இது அறிவுரை அல்ல. எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்’ என்றார்
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில் ‘‘இந்த படத்திற்காக அப்பா தேவா ஒரு பாடலை பாடியிருக்கிறார். நான் ஒரு பாடல் காட்சியில் ஆடியும் நடித்துள்ளேன். இதில் குத்துபாடல், அம்மா சென்டிமென்ட் பாடல் என எல்லாம் இருக்கிறது. அந்த படப்பிடிப்பு பெங்களூரில் ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள். எங்களுக்கு பத்து மணிவரை சாப்பாடு வரவில்லை. நான் ஆடி நடித்ததால் களைப்பாக இருந்தேன். பசியாக இருந்தேன். சாப்பாடு எங்கே என்று கேட்டபோது, எங்களுக்கான விதவிதமான சாப்பாட்டை அங்கே இருந்த மக்களுக்கு தயாரிப்பாளர் பாண்டுரங்கன் கொடுத்துவிட்டார். அந்த ருசியான சாப்பாட்டை மக்கள் விரும்பியதால் அதை செய்தார். சற்று நேரம் கழித்து எங்களுக்கு சாப்பாடு வரவழைத்தார். அந்த மனசு பிடித்து இருந்தது.