சுந்தர்.சி -வடிவேலு கூட்டணியில் 14 ஆண்டுகளுக்குபின் வந்திருக்கும் படம் ‘கேங்கர்ஸ்’. அரசன் கோட்டை ஊரில் அண்ணன், தம்பிகள் 3 பேர் சரக்கு விற்பனை, அடிதடி என அராஜகம் செய்கிறார்கள். அந்த பள்ளியில் படிக்கும் ஒரு பெண் குழந்தை காணாமல் போக, அது பற்றி விசாரிக்க ஒரு ரகசிய போலீசை அங்கே அனுப்புகிறார்கள் உயர் அதிகாரிகள். அந்த பள்ளியில் பி.டி.வாத்தியாராக பணியில் சேர்கிறார் சுந்தர்.சி. ஏற்கனவே பி.டி.வாத்தியராக இருப்பவர் வடிவேலு. இன்னொரு டீச்சர் கேத்ரின் தெரசா. அந்த பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதா? அந்த ஊருக்கு ஏன் சுந்தர்.சி வந்தார். அடாவடி பிரதர்ஸ் தியேட்டரில் பதுக்கி வைத்து இருக்கும் 100 கோடி பணத்தை சுந்தர்.சி, வடிவேலு, கேத்ரின் தெரசா அன் கோ திருடினார்களா என்பது கேங்கர்ஸ் படக்கதை.
குழந்தை கடத்தல், அண்ணன் தம்பிகளால் ஊரில் நடக்கும் அராஜகம், கேத்ரின் தெரசா காதல் என முதலில் மெதுவாக நகர்கிறது கதை. கொஞ்ச நேரத்தில் ஆள் மாறாட்ட காமெடிகளால் படம் சூடுபிடிக்கிறது. வில்லன் குருப்பை மாறுவேடத்தில் சுந்தர்.சி அடித்து நொறுக்க, அந்த பழி வடிவேலு மீது விழுகிறது. அவர் கேத்ரின் தெரசாவை காதலிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் வெளியூரில் தலைமறைமாக இருக்கும் வில்லன் கேங்கின் மூத்த அண்ணன் ஊருக்கு வருகிறார். நான் யார் என்பதை சுந்தர்.சி மற்றவர்களுக்கு சொல்ல, தியேட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 100 கோடி பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள். அப்புறமென்ன, திரைக்கதை, காமெடி சூடுபிடித்து பரபரப்பு ஏற்படுகிறது.
கதைப்படி சுந்தர்.சிதான் ஹீரோ என்றாலும் பல இடங்களில் வடிவேலு ஹீரோவாக கலக்குகிறார். பி.டி.வாத்தியார் சிங்காரமாக அவர் அடிக்கும் லுாட்டிகள், டயலாக் சிரிப்பை தருகிறது. குறிப்பாக, அதை அடிக்கலை, இதை அடிக்கலை என அவர் பேசும் நீண்ட டயலாக் செம காமெடி. ஆள் மாறாட்ட விஷயத்தில் வில்லன் கேங்கிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்குவது, வில்லனை அடிப்பது போல செல்பி எடுத்து வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்டு வம்பில் சிக்குவது, தெருக்கூத்து கலைஞர் வேஷம் போட்டு வில்லன் டீமிடம் சிக்குவது என கலக்கியிருக்கிறார். இடைவேளைக்குபின் வடிவேலு காமெடி இன்னும் உச்சம் தொடுகிறது. குறிப்பாக, தியேட்டரில் இருக்கும் 100 கோடி பணத்தை எடுக்கும் திட்டத்தில் பெண் வேஷம்போட்டு அவர் கலக்கியிருக்கிறார். வில்லனிடம் இருந்து அவர் சாவி திருடுகிற சீன், பாட்டு பாடுவது அருமை. அந்த பெண் வேஷத்தில் வடிவேலு செய்யும் சேஷ்டைகள் செம. அந்த காட்சிகள் வயிறுவலிக்கும் சிரிப்பை வழைக்கின்றன. இப்படிப்பட்ட வடிவேலுவை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று யோசிக்க தோன்றுகிறது.
சுந்தர். சி டீமில் இருக்கும் பகவதிபெருமாள், கேத்ரின், சந்தான பாரதி ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். முதற்பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், 2ம் பாதியில் படம் சூடுபிடிக்க தொடங்குகிறது. சுந்தர்.சி, கேத்ரின் காதல் காட்சிகள் தொய்வு, வில்லன் சம்பந்தப்பட்ட சீன்களின் சினிமாதனம், பாடல்கள் சுமார் என பல குறைகள் இருந்தாலும், வழக்கமான சுந்தர்.சி மாஜிக், வடிவேலு காமெடி, மற்றவர்களுடன் இணைந்து அவர் நடிக்கும் லுாட்டி விறுவிறுப்பு. குறிப்பாக, பணத்தை எடுக்க அவர்கள் போடும் திட்டம், ஒவ்வொரு கேரக்டரும் தியேட்டருக்கு சென்று நடிப்பு, காமெடி பண்ணுவது ஆகியவை கடைசி அரை மணி நேரத்தை கலகலப்பாக்குகிறது.