ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இந்தக் கொடூர தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளில் ஒருவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைசரன் பள்ளத்தாக்குக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணி குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், அந்த பயங்கரவாதி துப்பாக்கி வைத்துள்ளார். இந்தப் படம் தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளார். அவரது தலைமையில் தேச பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பஹல்காமில் நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.