ஒருவர் எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும், தீவிர சிந்தனைவாதியாக இருந்தாலும் அவருக்குள்ளும் ஒரு குழந்தைத்தன்மை ஒளிந்திருக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்தப் புகைப்படம். பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளின் தந்தையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)ஒரு குழந்தையைப் போன்று நாக்கை துருத்திக்கொண்டு, தன்னைப் படமெடுக்கும் புகைப்படக்காரரை பழிப்பதுபோன்ற இந்த படம் அரிதானது மட்டுமல்ல, அதிக விலைமதிப்பும் கொண்டது. ஐன்ஸ்டீனின் கையெழுத்துடன் கூடிய இப்படத்தின் பிரதி ஒன்று 1,57,000 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 1.10கோடி ரூபாய்) ஏலத்தில் எடுக்கப்பட்டதில் இருந்தே இது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 72-வது பிறந்த நாளன்று அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நியூ ஜெர்ஸியில் உள்ள பிரின்ஸ்டன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது ஐன்ஸ்டீனை பேட்டி காணவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமான பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். ஒரு பக்கம் நண்பர்களுடன் பேசுவது, மறுபக்கம் பத்திரிகையாளர்களைச் சமாளிப்பது என்று தொடர்ந்து பரபரப்பாக இருந்த ஐன்ஸ்டீன், நிகழ்ச்சியை முடித்துவிட்டு களைப்புடன் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத் தலைவரான டாக்டர்.பிராங்க் அய்டிலோட் மற்றும் அவரது மனைவியுடன் காரில் அமர்ந்த நேரத்தில் அவரை அணுகியுள்ளார் யுபிஐ நிறுவனத்தின் புகைப்படக்காரரான ஆர்தர் சச்சே (Arthur Sasse).
“மற்ற புகைப்படக்காரர்கள் உங்களைச் சுற்றி நெருக்கியடித்ததால், என்னால் உங்களை படமெடுக்க முடியவில்லை. எனவே தயவுசெய்து எனக்காக ஒரு போஸ் கொடுங்கள்” என்று ஐன்ஸ்டீனிடம் கேட்டிருக்கிறார் ஆர்தர். ஏற்கெனவே புகைப்படக்காரர்களுக்கு பலவிதமான போஸ்களைக் கொடுத்து சோர்ந்து போயிருந்த ஐன்ஸ்டீன், வேண்டாவெறுப்பாக அவருக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது ஆர்தர் சச்சே, “சார் கொஞ்சம் சிரித்தவாறு போஸ் கொடுங்கள் பிளீஸ்”என்று கெஞ்ச, அவருக்கு பழிப்புக் காட்டுவதுபோல் நாக்கைத் துருத்தியவாறு சிரித்துள்ளார் ஐன்ஸ்டீன். எத்தனை வேகத்தில் நாக்கைத் துருத்தினாரோ, அத்தனை வேகத்தில் நாக்கை உள்ளேயும் இழுத்துள்ளார்.
சச்சேவை வெறுப்பேற்றத்தான் நாக்கைத் துருத்தினாரே தவிர, அதை அவர் படமெடுப்பார் என்று ஐன்ஸ்டீன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நாக்கைத் துருத்திய அரை வினாடி நேரத்துக்குள் அதைப் படம்பிடித்துள்ளார் ஆர்தர் சச்சே..
இந்த படத்தை எடுத்தது பற்றிக் கூறும் ஆர்தர், “ஐன்ஸ்டீனிடம் போஸ் கொடுக்குமாறு கேட்கும்போதே அவரைப் படமெடுப்பதற்காக கேமராவை தயார் நிலையில் வைத்திருந்தேன் அதனால் அவர் நாக்கைத் துருத்தி என்னைப் பார்த்ததும் உடனடியாக க்ளிக் செய்து விட்டேன்.இந்தப் படத்தை அலுவலகத்தில் கொண்டுபோய்க் கொடுத்ததும் அதை பயன்படுத்தலாமா கூடாதா என்ற குழப்பம் என் மேலதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
என்னை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பிய அசைன்மெண்ட் எடிட்டரான கேவியோ சிலியோவுக்கு இப்படம் பிடித்திருந்தது. ஆனால் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு இப்படம் பிடிக்கவில்லை. இதனால் அதை வெளியிடுவதா வேண்டாமா என்று சிறிது நேரம் விவாதம் நடத்தினர். பின்னர் அப்படம் வெளியானது. இது வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்கிறார்.